ஹெய்டி ஜனாதிபதி ஜோவனல் மோஸ் படுகொலைக்கு, முக்கிய நபராக அறியப்படும் அமெரிக்க மருத்துவரொருவரை அந்நாட்டு பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
63 வயதான கிறிஸ்டியன் இமானுவேல் சனோன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹெய்டி பொலிஸ் தலைமை அதிகாரி லியோன் சர்லஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ëஹெய்டியில் பிறந்து அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் குடியேறியவர் ஆவார். மருத்துவரான இவர் அரசியல் நோக்கங்களுடன் தனி விமானம் மூலம் ஹெய்டி வந்துள்ளார்.
ஜனாதிபதி ஜோவனல் மோயிசை கைது செய்வதே தங்களின் முதல் திட்டமாக இருந்ததாகவும், பின்னர் அது மாறியதாகவும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
எனினும், இது பற்றிய விரிவான தகவல்களை அவர் வழங்கவில்லை. இதுகுறித்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறதுí என கூறினார்.
இதனிடையே, ஹெய்டியின் பாதுகாப்பு நிலைமையை மதிப்பீடு செய்வதற்காக அமெரிக்காவின் பாதுகாப்பு மற்றும் நீதித்துறையை சேர்ந்த மூத்த அதிகாரிகள் பலர் நேற்று முன்தினம் ஹெய்டி சென்றனர்.
இவர்கள் ஹெய்டியின் ஆட்சித் தலைவர் என தங்களை கூறி வரும் 3 பேரையும் தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
முன்னதாக ஜனாதிபதியின் படுகொலையை தொடர்ந்து நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையை சமாளிக்க படையை அனுப்பி உதவுமாறு அமெரிக்காவிடம் ஹெய்டி அரசாங்கம் கோரிக்கை வைத்ததும், அதனை அமெரிக்க அரசாங்கம் நிராகரித்ததும் குறிப்பிடத்தக்கது.