மன்னாரில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் உள்ள வைத்தியர்களின் பொறுப்பற்ற செயல், விபத்திற்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக விசனம் வெளியிடப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
சமீபத்தில் மன்னாரில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த நபர் ஒருவரை, அவரது நண்பர்கள் இரணை இலுப்பக்குளம் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ள நிலையில் அங்கு படுகாயமடைந்த நபருக்கு எவ்வித முதலுதவியும் வழங்கப்படவில்லை என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பின்னர் காயமடைந்த நபரை வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பியுள்ளனர். இவ்வாறு வவுனியா வைத்தியசாலைக்கு அனுப்பப்படும் போது படுகாயமடைந்த நபர் உயிருடன் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இலுப்பக்குளம் வைத்தியசாலையில் இருந்து வவுனியா வைத்தியாசலைக்குச் சென்றுக் கொண்டிருக்கும் போது ஈச்சங்குளம் பகுதியில் அவர் உயிரிழந்துள்ளார்.
சரியான நேரத்திற்கு இலுப்பக்குளம் வைத்தியசாலைக்குச் சென்றும் வைத்தியசாலையில் உள்ளவர்களின் அசமந்தப் போக்கினால் இந்த உயிர் பறிபோயுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மேலும், இரணை இழுப்பக்குளம் வைத்தியசாலையில் உள்ள அம்பியூலன்ஸ் வண்டியும் பாவனைக்கு உகந்த வகையில் தயார் நிலையில் இல்லாததன் காரணமாக படுகாயமடைந்த நபரை வவுனியா வைத்தியசாலைக்குக் கொண்டுச் செல்வதில் மேலும் தாமதம் ஏற்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.