அந்நிய செலாவணி சட்டத்தின் விதிகளின் கீழ் வெள்ளவத்தையில் உள்ள பணப்பரிமாற்ற மையத்தின் உரிமத்தை இன்று முதல் இடைநிறுத்துவதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் அந்நியச் செலாவணி திணைக்களம், அதிக நாணய மாற்று விகிதங்களை வழங்குவதாக பொதுமக்களிடமிருந்து வந்த முறைப்பாடுகளை அடுத்து, அந்நிறுவனத்தை நேற்று நேரில் ஆய்வு செய்தது.
இதன்போது , அந்நிறுவனம் அந்நியச் செலாவணிச் சட்டத்தை மீறி, வங்கிகளால் உரிமம் பெற்றதை விட அதிக மாற்று விகிதத்தில் வெளிநாட்டு நாணயங்களை வாங்குகின்றமை தெரியவந்தது.
இதனையடுத்து , இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில், அங்கீகரிக்கப்பட்ட பணம் மாற்றும் நிறுவனமாக அந்த நிறுவனம் பணப் பரிமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த இடைநிறுத்தப்பட்ட காலப்பகுதியில் அந்த நிறுவனத்துடன் மேற்கொள்ளப்படும் எந்தவொரு பரிவர்த்தனையும் அந்நிய செலாவணி சட்டத்தின் விதிகளை மீறுவதாகக் கருதப்படும் என்றும் இலங்கை மத்திய வங்கி பொதுமக்களுக்கு அறிவிக்கிறது.
அதேவேளை அங்கீகரிக்கப்பட்ட பணம் மாற்றுபவர்கள் மீதான ஆன்-சைட் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளதாகவும், அந்நியச் செலாவணி சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களுக்கு இணங்காத அங்கீகரிக்கப்பட்ட பணம் மாற்றுபவர்களின் உரிமங்களை இடைநிறுத்துவதாகவும் அல்லது ரத்து செய்வதாகவும் மத்திய வங்கி அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.