வணிகப்பொருள் வர்த்தகப் பற்றாக்குறையானது முன்னைய மாதத்துடன் ஒப்பிடுகையில் 2022 நவம்பரில் விரிவடைந்து காணப்பட்டபோதிலும் ஓராண்டிற்கு முன்னைய நிலையுடன் ஒப்பிடுகையில் தாழ்ந்தளவிலேயே காணப்பட்டது.
தாழ்ந்தளவிலான உலகளாவிய கேள்வியின் காரணமாக, குறிப்பாக ஆடை ஏற்றுமதிகளுக்கான கேள்வி, வணிகப்பொருள் ஏற்றுமதிகளிலிருந்தான வருவாய்கள் 2022 நவெம்பரில் வீழ்ச்சியடைந்தது.
அதேவேளை, வணிகப்பொருள் இறக்குமதிச் செலவினமும் 2022 ஒக்டோபருடன் ஒப்பிடுகையில் அதிகரிப்பொன்றினைப் பதிவுசெய்தபோதும் 2022 நவெம்பரில் தொடர்ச்சியாக ஒன்பதாவது மாதமாக ஆண்டிற்காண்டு அடிப்படையில் வீழ்ச்சியடைந்து காணப்பட்டது.
தொழிலாளர் பணவனுப்பல்களானது 2022 நவெம்பரிலும் மீளெழுச்சியைத் தொடர்ந்ததுடன் முன்னைய ஆண்டு மற்றும் முன்னைய மாதத்துடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்களவு அதிகரித்துக் காணப்பட்டது.
முன்னைய மாதத்துடன் ஒப்பிடுகையில் 2022 நவெம்பரில் சுற்றுலாப் பயணிகளின் வருகைகளில் காணப்பட்ட 40 சதவீத வளர்ச்சியால் துணையளிக்கப்பட்டு சுற்றுலாத் துறையிலிருந்தான வருவாய்கள் அதிகரித்துக் காணப்பட்டன.
அரச பிணையங்கள் சந்தையில் மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டு முதலீடுகள் 2022 நவெம்பர் காலப்பகுதியில் சிறியளவிலான தேறிய உட்பாய்ச்சலொன்றினைப் பதிவுசெய்த அதேவேளையில் கொழும்பு பங்குப் பரிவர்த்தனை 2022 நவெம்பர் காலப்பகுதியில் சிறியளவிலான தேறிய வெளிப்பாய்ச்சலொன்றினைப் பதிவுசெய்தது.
மத்திய வங்கி அத்தியாவசிய இறக்குமதிகளுக்கு நிதியளிக்கும் பொருட்டு வெளிநாட்டுச் செலாவணித் தேவைப்பாட்டினைத் தொடர்ந்து வழங்கியது. அதன் விளைவாக, மொத்த அலுவல்சார் ஒதுக்குகளைக் கட்டியெழுப்புதல் மட்டுப்படுத்தப்பட்டு காணப்பட்டது.
அதேவேளை, வங்கிகளுக்கிடையிலான சந்தையில் சராசரி நிறையேற்றப்பட்ட உடனடிச் செலாவணி வீதமானது மாத காலப்பகுதியில் ஐ.அ.டொலரொன்றிற்கு ஏறத்தாழ 363 ரூபாவாகத் தொடர்ந்தும் காணப்பட்டது.