வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களின் பணப் பரிமாற்றம் மற்றும் பணப் பரிமாற்றத்தை அதிகரிக்க இலங்கை மத்திய வங்கி புதியதொரு கைத்தொலைபேசி செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
பணம் அனுப்புதலை ஊக்குவிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து இலங்கை மத்திய வங்கி புதிய பணம் அனுப்பும் முறைகள் மற்றும் குறைந்த செலவில் பணம் அனுப்பும் முறைகள் பற்றிய பரிந்துரைகளை வழங்க ஒரு குழுவை நியமித்துள்ளது.
இக்குழுவில் இலங்கை வங்கி, மக்கள் வங்கி, சம்பத் வங்கி, கொமர்ஷல் வங்கி, ஹட்டன் நஷனல் வங்கி, எச்எஸ்எஃப்சி வங்கி, கார்கில்ஸ் வங்கி, டயலொக் , மொபிடெல் மற்றும் இலங்கை மத்திய வங்கியின் நிபுணர்கள் மற்றும் நிறுவனங்களின் பிரதிநிதிகள் அடங்குகின்றனர்.
சம்பந்தப்பட்ட குழுவின் பரிந்துரையின் பேரில் இப்புதிய கைத்தொலைபேசி செயலி ‘SL-Remit’ எனும் பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இச்செயலியில் சுயமாகப் பதிவு செய்வதன் மூலம் பணப்பரிமாற்ற இயக்குனர்கள் மற்றும் உலகளாவிய நிதி தொழில்நுட்ப சேவை வழங்குனர்களுடன் இணைந்து எந்த நாட்டிலிருந்தும் பணம் அனுப்பும் வசதிகள் மற்றும் இலங்கையின் எந்த வங்கிக் கணக்கிற்கும் உடனடியாக பணப்பரிமாற்றம் செய்யும் வசதியைப் பெறலாம்.
அதோடு இந்தச் செயலியில் அந்நியச்செலவாணி விகிதங்கள், குறைந்த பரிவர்த்தனைக் கட்டணம், பில் கட்டணங் களைச் செலுத்தல் போன்ற பல சேவைகளும் இணைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இந்தச் செயலியானது மத்திய வங்கி, நிதி அமைச்சு, வெளிவிவகார அமைச்சு, வங்கிகள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், லங்கா கிளியர் போன்ற பங்குதார்களின் உதவியுடன் செயற்படுத்தப்படுவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.