ஏற்றுமதி வருவாயை மாற்றுவதற்கான விதிகள் புலம்பெயர் தொழிலாளர்களின் பணம் அனுப்புதலுக்கு பொருந்தாது என்று மத்திய வங்கி அறிவித்துள்ளது
இலங்கை மத்திய வங்கியால், அண்மையில் வெளியிடப்பட்ட, ஏற்றுமதி வருமானத்தை இலங்கை ரூபாய்க்கு மாற்றுவது தொடர்பாக சில விதிகள், குறிப்பிட்ட தரப்பினரால் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளன.
குறிப்பாக, உரிமம் பெற்ற வங்கிகள், புலம்பெயர் தொழிலாளர்களின் முழுப் பணத்தையும் கட்டாயமாக ரூபாவாக மாற்ற வேண்டும் என்று கூறிவருகின்றன.
எனினும் ஏற்றுமதி வருவாயை ரூபாவாக மாற்றுவதற்கான விதிகள் புலம்பெயர் தொழிலாளர்களின் பணம் அனுப்புதலுக்கு பொருந்தாது என்று மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் உரிமம் பெற்ற வங்கிகள் மற்றும் பிற முறையான மார்க்கங்கள் மூலம் தங்கள் வருவாயை அனுப்பும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அத்தகைய நிதியை எந்த வணிக வங்கியிலும் அந்நிய செலாவணியாக வைத்திருக்கலாம்.
அதன்படி, வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்கள் தாங்கள் அனுப்பும் பணத்தை ரூபாவாக மாற்றுவது கட்டாயமில்லை.
எவ்வாறாயினும், அந்த வருமானத்தை ரூபாவாக மாற்ற விரும்புவோருக்கு, பணம் அனுப்பும் ஊக்கத் திட்டத்தின் கீழ் ஊக்கத்தொகையாக 2021 ஜனவரி 31 வரை ஒரு அமெரிக்க டொலருக்கு 10.00 ரூபா செலுத்தப்படும் என்று மத்திய வங்கி அறிவித்துள்ளது.