வவுனியா நெடுங்கேணி வெட்டுக்குநாறி மலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலய இன்றைய சிவராத்திரி தினத்தை நடத்தவிடாமல் தடுக்க சில பிக்குகளின் தூண்டுதலில் நெடுங்கேணிப் பொலிஸார் ஆலய நிர்வாகத்தினரை அச்சுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் பொலிஸாரின் இந்த நடவடிக்கை சிவராத்திரி தினத்தை அங்கு நடத்த அனுமதியளித்துள்ள நீதிமன்றத்தை அவமதிக்கும் நடவடிக்கை என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாவட்ட எம்.பி.யான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை(07) இடம்பெற்ற வன விலங்குகளால் பயிர்களுக்கு ஏற்படும் சேதம் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,
சிவராத்திரி என்பது இந்துக்களின் முக்கியமான தினம்.இந்து ஆலயங்களில் இந்த சிவராத்திரி வழிபாடு என்பது மிகவும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.அவ்வாறான ஏற்பாடுகள் வவுனியா மாவட்டத்தில் நெடுங்கேணி பிரதேசத்தில் வெட்டுக்குநாறி மலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்திலும் வழமையாக நடைபெறுவதுண்டு.
அங்கு கடந்த சில வருடங்களாக தொல் பொருள் திணைக்களத்தின் இடையூறுகள் இருந்தாலும் கூட நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் வழிபாடுகள் நடைபெற்றுவந்த நிலையில் இன்று நடைபெறவுள்ள சிவராத்திரி தின நிகழ்வை குழப்பும் விதமாக நெடுங்கேணிப் பொலிஸார் ஆலய நிர்வாகத்தினரை அச்சுறுத்தியுள்ளனர்.
அதாவது இரவு வேளையில் அங்கு நீங்கள் தங்கி இருந்தால் உங்களை கைது செய்வோம்,மின் விளக்குகள் அங்கு பொருத்தப்படக் கூடாது என்ற அச்சுறுத்தியுள்ளனர்.
சிவராத்திரி நிகழ்வை குழப்புவதற்கு அங்கு சில பிக்குகள் கங்கணம் கட்டி நிற்கின்றார்கள்.அந்த பிக்குகளுக்கு துணைபோகும் விதமாக நெடுங்கேணி பொலிஸுக்கு பொறுப்பான பொறுப்பதிகாரியும் பொலிஸாரும் இந்த அச்சுறுத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த ஆலயத்தில் சிவராத்திரி நிகழ்வை நடத்த முடுயுமென நீதிமன்றம் அறிவித்த்துள்ள நிலையில் பொலிஸாரின் இந்த அச்சுறுத்தல் நீதிமன்றத்தை அவமதிக்கும் செயற்பாடு. சிவராத்திரி இரவில் தான் அனுஷ்டிக்கப்படும். எனவே வெட்டுக்குநாறி மலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலய சிவராத்திரி நிகழ்வுக்கு எந்தவித தடைகளும் ஏற்படுத்தப்படக்கூடாது என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.