முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பொலிஸ் பிரதேசத்திற்குட்பட்ட பூதன்வயல் கிராமத்தில் வீட்டில் தனிமையில் இருந்த பெண்ணை கட்டிவைத்து விட்டு வீட்டில் இருந்த பணம், நகை, தொலைபேசி என்பன கொள்ளையிடப்பட்ட சம்பவம் ஒன்று நேற்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்…
பூதன்வயல் கிராமத்தில் வீட்டில் தனிமையில் வாழ்ந்து வந்த இளம் குடும்ப பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்த மூன்று கொள்ளையர்கள் தங்களை அடையாளம் காணாதவாறு முகத்தினை மூடிய நிலையில் வேலியினை வெட்டி காணிக்குள் சென்று வீட்டு ஜன்னல் வழியாக வீட்டிற்குள் நுழைந்து வீட்டில் இருந்த பெண்ணின் கை, கால்களை கட்டி வைத்து விட்டு பெண்ணை சத்தமிட முடியாதவாறு வாய்க்குள் துணிகளை அடைத்து சித்திரவதை செய்து வீட்டில் இருந்து சுமார் 25 இலட்சம் பெறுமதியான பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
கணவனை பிரிந்த நிலையில் தனது பிள்ளைகளை சிறுவர் இல்லத்தில் சேர்த்திருந்த நிலையில் தனிமையில் வீட்டில் இருந்த பெண்ணிடமே கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர் .15 பவுண் நகை, 5 இலட்சம் ரூபா பணம் மற்றும் பெறுதியான தொலைபேசி என்பன கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
கணவனை பிரிந்த நிலையில் மழை வெய்யில் பாராது தனது பிள்ளைகளை படிப்பிப்பதற்காக கஸ்ரப்பட்டு விவசாயம் செய்துவரும் தான் சீட்டு பிடிப்பதனூடாகவும் சிறிது சிறிதாக சேகரித்த பணம் நகைகளே இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவித்த குறித்த பெண் அடுத்த நாள் சீட்டு எடுத்தவருக்காக கொடுப்பதற்கு வைத்திருந்த 5 இலட்சம் ரூபா பணமும் கொள்ளையிடப்பட்டுள்ளதாக குறித்த பெண் தெரிவிக்கிறார்.
பல்வேறு துன்பப்பட்டு உழைத்த எனது பணம் நகைகள் பறிபோயுள்ளதாகவும் ஆயிரம் ரூபாவுக்கு கூட வழியின்றி தான் இப்போது இருப்பதாகவும் கொள்ளையர்களை இனம் கண்டு எனது நகை பணத்தை எப்பிடியாவது மீட்டு தருமாறு பொலிசாரை கோரியுள்ளார்.
தனக்கு ஏற்பட்ட இந்த மிரட்டலுடனான கொள்ளை சம்பவம் பாரிய அச்ச சூழலை தோற்றுவித்துள்ளதாக குறித்த பெண் தெரிவிக்கின்றார்.
மூன்று பேர் கொண்ட கொள்ளைக் கும்பல் இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்டவரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
நேற்று தடயவியல் பொலிசார்கள், மோப்ப நாய்கள் சகிதம் வந்து ஆய்வு செய்த நிலையில் இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முள்ளியவளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.