தற்காலத்தில் உலகம் முகங்கொடுத்திருக்கும் தொற்றுப் பரவலுக்கு மத்தியில், அனைத்துச் சிறுவர் சமுதாயத்தினதும் எதிர்பார்ப்புகளுடன் கூடிய சிறுவர் உலகத்துக்கான வரையறைகள் அதிகரித்துள்ளன. பாடசாலை வகுப்பறைகள், விளையாட்டு மைதானங்கள் என்பன, இன்னமும் எமது பிள்ளைகளுக்குத் தொலைதூரமாகியுள்ளன. எமது தேசத்தின் பிள்ளைகள் இழந்துள்ள அந்த அனைத்து எதிர்பார்ப்புகளையும், மிகவும் பாதுகாப்பாக மீளப் பெற்றுக்கொடுப்பதே, அரசாங்கத்தின் முதல் கடமையாக உள்ளது. சிறுவர்களின் உலகத்தை அவர்களுக்கு மிக விரைவில் பெற்றுக்கொடுப்பதற்கே. எங்களுடைய ஒட்டுமொத்தத் திட்டங்களும் செயற்படுத்தப்பட்டு வருகின்றன.
தமது பிள்ளைகள் மிகச் சிறந்தவர்களாக சமூகமயப்படும் போது, அதனால் திருப்தியடையப் போவது அவர்களின் பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்கள் மாத்திரமல்ல. அந்த சந்தோஷம், நாட்டின் ஒட்டுமொத்த மனிதச் சமுதாயத்துக்கும் கிடைக்கிறது. அவ்வாறான அனுபவங்கள் உலகில் ஏராளம் உள்ளன. அவ்வாறான சந்தர்ப்பங்கள் எதிர்காலத்திலும் உருவாகுவது நிச்சயம். அதனால், பெரியோர்களாகிய நாம், நல்லொழுக்கமுள்ள குழந்தைகள் தலைமுறையை இந்த நாட்டுக்கும் உலகத்துக்கும் வழங்க வேண்டுமாயின், அந்தக் குழந்தைகளின் அறிவு, மனப்பான்மை மற்றும் திறன்களை நிறைவுசெய்யத் தேவையான பின்னணியை அமைத்துக் கொடுப்பது கட்டாயமாகும்.
பெற்றோர் எப்போதும் கருதும் “அனைத்துக்கும் முன் குழந்தைகள்” என்ற எண்ணக்கருவே, இம்முறை உலக சிறுவர் தினத்தின் கருப்பொருளாகவும் அமைந்திருக்கிறது. முற்போக்கான அரசாங்கம் என்ற வகையில், பாதுகாப்பான சுற்றுச்சூழலுக்குள் குழந்தைகளுக்குத் தேவையான சேவைகள், வசதிகள் மற்றும் வாய்ப்புகளைப் பெற்றுக் கொடுப்பது, “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைத் திட்டத்தின் ஊடாக உறுதியளிக்கப்பட்டுள்ளது. இதை யதார்த்தமாக்குவதே எனது நோக்கமென்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
சமூகமயமாக்கல் செயற்பாட்டில் முன்னோடியாக இருக்கும் அனைத்து வகையான பெரியோர்களும், சிறுவர்கள் தொடர்பான பொறுப்புக்களை ஒருபோதும் குறைத்து மதிப்பிட முடியாது. அந்த வகையில், குழந்தைகளுக்கு உரித்தான குழந்தைப் பருவத்தை அவர்கள் சுதந்திரமாக அனுபவிக்க இடமளிக்குமாறு, உங்களிடம் நான் கேட்டுக்கொள்கிறேன். அந்தப் பருவத்தை ஒருபோதும் நாம் மீளப்பெற முடியாது.
இம்முறை உலக சிறுவர் தினத்தையும், தொற்றுப் பரவல் நிலைமை காரணமாகச் சிறுவர்களால் கொண்டாட முடியாதுள்ளது. இருப்பினும், வீடுகளில் இருந்தவாறே மகிழ்ச்சியாக அவர்கள் அதைக் கொண்டாட ஆசிர்வாதமளிக்கிறேன். உங்கள் அனைவருக்கும், சுபீட்சமான எதிர்காலம் அமையட்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது உலக சிறுவர் தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.