புத்தளம் – எலுவங்குளம் பிரதான வீதியின் வன்னாத்தவில்லு பகுதியில் இன்று (11) இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் 2 சிறுவர்கள் உட்பட 16 பேர் கயமடகந்துள்ளனர்.
எலுவங்குளத்தில் இருந்து புத்தளம் நோக்கிப் பயணம் செய்த தனியார் பயணிகள் பஸ் ஒன்று எதிர்த் திசையில் பயணித்த வேன் ஒன்றுக்கு இடம்கொடுக்க முற்பட்ட போது குடைசாய்ந்து வீதியோரத்தில் 4 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தின் போது இரண்டு சிறுவர்கள் உட்பட 16 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
இவ்வாறு காயமடைந்தவர்களில் 11 பேர் புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், மேலும் 5 பேர் வண்ணாத்தவில்லு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு சென்றுள்ளதாகவும் வண்ணாத்தவில்லு பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன், புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வயோதிபர் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது எனவும் பொலிஸார் கூறினர்.
அத்துடன், இந்த விபத்தில் வீதியின் அருகில் இருந்த மின் கம்பம் ஒன்றும் முழுமையாக சேதமடைந்துள்ளதால் அந்த வண்ணாத்தவில்லு பகுதியில் மின்சாரமும் தடைப்பட்டுள்ளது.
விபத்து சம்பவம் தொடர்பில் பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் வண்ணாத்தவில்லு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.