விடுதலை புலிகள் போராளிகளை நினைவுகூர்ந்த சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் அக்னெஸ் கலமார்ட் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட சிங்களவர்களையும், இராணுவத்தினரையும் ஏன் நினைவுகூரவில்லை என என தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற எதிர்க்கட்சியினர் கொண்டு வந்த சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,
விடுதலை புலிகளுடனான யுத்தம் முடிவுக்கு கொண்டு வந்து 15 ஆண்டுகள் பூர்த்தியடைந்துள்ள நிலையில் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த இராணுவத்துக்கு எதிரான செயற்பாடுகளும் தீவிரமடைந்துள்ளன.
இலங்கை இராணுவத்தினருக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த 30ஃ1 பிரேரணைக்கு நல்லாட்சி அரசாங்கம் இணையனுசரனை வழங்கியது.இதன் பின்னரே இராணுவத்துக்கு எதிராக நெருக்கடிகள் அதிகரித்தன. முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் 30/1 பிரேரணையில் இருந்து விலகிய போதும் அப்பிரேரணையின் உள்ளடக்கங்கள் செயற்படுத்தப்பட்டுள்ளன.
இலங்கை இராணுவத்தினரை சர்வதேச நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த உறுப்பு நாடுகளுடன் கலந்துரையாடியுள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் காரியாலயம் குறிப்பிட்டுள்ளமை அவதானத்துக்குரியது.
இவ்விடயம் குறித்து எதிர்க்கட்சியின் நிலைப்பாடு என்ன ? விடுதலை புலிகள் போராளிகள் தற்போது பகிரங்கமாக அனுஷ்டிக்கப்படுகிறார்கள்.கடந்த வாரம் இடம்பெற்ற நினைவேந்தலில் பலர் பங்குப்பற்றியிருந்தார்கள்.
வெள்ளையர்களும் கலந்துக் கொண்டார்கள்.சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் அக்னெஸ் கலமார்ட் விடுதலை புலிகள் போராளிகளை நினைவு கூர்ந்தார்.
இந்த யுத்தத்தில் சிங்களவர்களும் , இராணுவத்தினரும் விடுதலை புலிகளால் படுகொலை செய்யப்பட்டார்கள்.சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் ஏன் இவர்களை நினைவுகூரவில்லை.
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையிடுகிறார்.வியன்னா ஒப்பந்தத்துக்கு அப்பாற்பட்டு செயற்படுகிறார்.
யாழ்ப்பாணத்துக்கு சென்று விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளை சந்தித்து சுயநிர்ணயம் பற்றி பேசியுள்ளார்.
ஆகவே இவரது செயற்பாடுகள் குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும் என்றார்.