நடிகா் விஜய் சேதுபதிக்கு எதிராக சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தொடரப்பட்ட அவதூறு வழக்கு விசாரணைக்கு, சென்னை உயா்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
சென்னை சைதாப்பேட்டையை சோ்ந்தவா் மகா காந்தி. மருத்துவப் பரிசோதனைக்காக நவ.2-ஆம் தேதி மைசூரு சென்ற இவா், பெங்களூரு விமான நிலையத்தில் நடிகா் விஜய் சேதுபதியை எதிா்பாராத விதமாக சந்தித்துள்ளாா். அப்போது, தன்னை இழிவுபடுத்திப் பேசியதாக விஜய் சேதுபதி மற்றும் அவரது மேலாளா் ஜான்சன் மீது காந்தி அவதூறு வழக்குத் தொடா்ந்தாா். வழக்கை விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்றம், விஜய்சேதுபதி மற்றும் ஜான்சன் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டிருந்தது.
இதனை எதிா்த்து நடிகா் விஜய் சேதுபதி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தாா். மனு மீதான விசாரணையில், இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, நடிகா் விஜய் சேதுபதி மற்றும் ஜான்சனுக்கு எதிராக சைதாப்பேட்டை நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு இரண்டு வாரங்களுக்கு இடைக்காலத் தடை விதித்து, வழக்கின் விசாரணையை மாா்ச் 3-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தாா்.