வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் இன்று (20.05.2024) நடைபெறவுள்ள வைகாசி விசாகப் பொங்கலுக்கு ஆலயம் வரும் பக்தர்களிடமும் வியாபாரிகளிடமும் கோரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.
சமூக ஆர்வலர்கள் பலரும் இது தொடர்பில் தங்கள் கோரிக்கையை முன்வைத்துள்ளமை நோக்கத்தக்கது.
கடந்த 2023 ஆம் வருட வைகாசிப் பொங்கல் நிகழ்வுக்கு வந்திருந்த மக்களின் சிந்திக்க மறந்த செயற்பாடுகள் மூலம் ஆலயச் சூழலில் தேங்கியிருந்த கழிவுகளின் காட்சிகளை அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மூலம் சுட்டிக்காட்டியிருந்தனர்.அந்த புகைப்படங்களே இந்தச் செய்தியுடன் இணைக்கப்பட்டுள்ளன.
ஆலயச் சூழலில் வீசப்படும் குப்பைகளை அகற்றுவதற்காக அடுத்த நாளில் பலர் பங்கெடுத்து சிரமங்களுக்கு மத்தியில் பணியாற்றி ஆலயச் சூழலை சுத்தமாக்கிக் கொள்ள வேண்டியிருந்தது எனவும் அவர்கள் மேலும் குறிப்பிட்டனர்.
ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்கும் வியாபார நிலையங்களுக்கும் குப்பைகளை எப்படி பேண வேண்டும் என்ற தெளிவூட்டல்கள் அவசியமாகும்.
உற்சவ கால ஏற்பாடுகளில் போது அதனை பிரதேச சபையும் ஆலய நிர்வாகமும் கவனத்தில் எடுத்திருக்கும் என்பதும் இங்கே நோக்கத்தக்கது.
எனினும் குப்பைகளை வீசும் நிலையில் இருப்பவர்கள் அதனை உரிய குப்பைக் கூடைகளில் போட்டு விடலாம். அல்லது அவற்றை ஒன்றாக சேர்த்து ஒரு பையில் போட்டு கட்டி அவரவர் இருக்கும் இடங்களுக்கு அருகில் வைத்துவிட்டால் அவற்றை அடுத்த நாளில் எடுத்தகற்றுவது இலகுவானதாக இருக்கும் எனவும் சுட்டிக்காட்டுகின்றனர்.
காற்றில் பரவிச் செல்லும் குப்பைகள் தொடர்பில் அதிக கவனமெடுத்து ஒவ்வொருவரும் வீச முற்படும் கழிவுகளை மீளவும் பெற்றுக்கொள்ளும் வகையில் பையிலிட்டுக் கட்டி வைப்பதே மேலானதாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் ஒரு பகுதியாக நந்திக்கடல் இருக்கிறது.
வைகாசிப் பொங்கலின் போது எழுந்தமானமாக வீசப்படும் பொலித்தீன் உள்ளிட்ட குப்பைகள் காற்றோடு எடுத்துச் சென்று நந்திக்கடலில் கலந்து விட்டால் நந்திக்கடல் பொலித்தீன் போன்ற இலகுவில் உக்கலடையாத பொருட்களால் மாசடைந்து கொண்டு செல்லும்.இது ஆரோக்கியமான செயற்பாடாக இருக்காது என்பதும் நோக்கத்தக்கது.
நந்திக் கடலின் மீன்வளம் இதனால் பாதிப்படைவதோடு நந்திக்கடலில் உள்ள பரந்த உயிர்ப்பல்வகைமையும் அழிவை நோக்கி விரைவாக கொண்டு செல்லப்பட்டு விடும்.
ஒரு நாளில் நடந்தேறும் வைகாசிப் பொங்கல் நிகழ்வில் நாம் ஒவ்வொருவரும் நடந்து கொள்ளும் சிந்தனையற்ற முறையிலான செயற்பாடுகளுக் கூடாக வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயம் மற்றும் நந்திக்கடல் சூழலை மாசாக்கிச் செல்வது நல்லதல்லவே!
ஆலய எல்லைக்குள் நுழையும் ஒவ்வொருவரும் மனதளவில் ஆலயச் சூழலை சுத்தமாக பேணுவதில் என்னாலான எல்லாவற்றையும் இயன்றளவில் செய்து கொள்வேன் என்று எண்ணிக் கொள்ள வேண்டும்.
அப்போதே நாம் நம்மைத் தயார் செய்து கொண்டு விடுவோம்.நாம் வாங்கிக் கொள்ளும் ஒவ்வொரு பொருட்களில் இருந்தும் அகற்றி வீசப்படும் பொருட்களை அருகில் வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகளினுள் போட்டுச் செல்ல முற்பட முனைந்துவிடுவோம்.
ஒருங்கிணைந்த முறையில் செயற்பட முடிந்தால் ஆலயச் சூழலில் சேரும் குப்பைகள் சிதறிச் செல்வதை தடுப்பதோடு அவற்றை அகற்றுவோருக்கு இலகுவானதாகவும் ஆக்கிப் போகலாம் என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.