வாகனங்களை வாடகைக்கு எடுத்து அவற்றை திருப்பிக் கொடுக்காமல் மோசடி செய்த பல சம்பவங்களுடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கேகாலை விசேட குற்றத்தடுப்புப் பிரிவு மற்றும் மத்துகம விசேட குற்றத்தடுப்புப் பிரிவுக்கு அறிவிக்கப்பட்ட ஏழு சம்பவங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் மூவருடன் ஐந்து மகிழுந்துகளும், இரண்டு சிற்றூர்திகளும் ஜீப் ரக வாகனமொன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி பகுதியில் கைது செய்யப்பட்ட இச்சந்தேகநபர்கள் 27, 29 மற்றும் 37 வயதுடையவர்கள் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
இவர்கள் பிலிமத்தலாவ மற்றும் தந்துரே ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
மேலும் சந்தேகநபர்கள் மூவரும் மாவனல்லை நீதவான் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன், கேகாலை விசேட குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.