வவுனியா நகரிலுள்ள பெரியார் சிலைகளை பராமரித்து அவர்களது நினைவு தினங்களை ஏற்பாடு செய்வதை வவுனியா நகரசபை முறையாக பின்பற்றப்படவில்லையென தெரிவித்து சமூக ஆர்வலர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
வவுனியா நகரிலுள்ள பெரியார் சிலைகளை நகரசபை பொறுப்பேற்று அதனை ஒழுங்குபடுத்தி, ஏற்பாட்டுக்குழு நியமிக்கப்பட்டு முறையாக அவர்களது நினைவு தினங்களை ஏற்பாடு செய்து பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதாக நகரசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
எனினும் அண்மைய சில நினைவு தினங்களை முறையாக பின்பற்றப்படவில்லை. இதனால் சமூக ஆர்வலர்கள் இப்பணிகளை மேற்கொள்ள முன்வந்தபோது அதனை தடுத்து அவர்களையும் செய்யவிடாமல் நகரசபையும் செய்யாமல் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் சிலர் விசனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது,
நகரிலுள்ள பெரியார்களின் சிலைகளை பொறுப்பேற்று வர்ணம் பூசுதல், சிரமதானங்களை மேற்கொள்ளல் நினைவு தினங்களை ஏனையவர்களுக்கு தெரிவித்து ஏற்பாடு செய்வதற்காக ஒரு குழு நியமிக்கப்பட்டது.
எனினும் தற்போது அந்த நடைமுறை அனைத்தும் கைவிடப்பட்டுள்ளது.
சிலைகள் பராமரிப்பு உட்பட பெரியார்களின் நினைவு தினங்களைளும் குறிப்பிட்ட தினங்களில் நினைவு கூரப்படுவதில்லை.
இன்றைய தினம் சுவாமி விபுலானந்தரின் 75 ஆவது நினைவு தினத்தை ஏற்பாடு செய்த சமூக ஆர்வலர்கள் ஒன்றிணைந்து மீண்டும் பெரியார்களின் நினைவு தினங்களை ஏற்பாடு செய்வதற்கு முன்வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.