வவுனியாவில் திடீரென பழக்கடை ஒன்று தீப்பற்றி எரிந்து நாசமாகியுள்ளது. இச்சம்பவம் நேற்று இரவு 9.30 மணியளவில் நடந்தது என தகவல்கள் வெளியாகியுள்ளது.
வவுனியா, குருமன்காடு சாந்தி கிளினிக் அருகாமையில் உள்ள பழக்கடை ஒன்றை அதன் உரிமையாளர் வியாபாரம் முடிந்து பூட்டி விட்டு சென்று சிறிது நேரத்தில் குறித்த பழ வியாபார நிலையத்தில் தீ பிடித்து எரிந்துள்ளது.
அந்த பழ வியாபார நிலையம் தீ பிடித்து எரிவதை அவதானித்த அயலவர்கள் வவுனியா நகரசபை தீயணைப்பு பிரிவினர் மற்றும் பொலிசாருக்கு தகவல் வழங்கியதுடன் வியாபார நிலைய உரிமையாளருக்கும் தெரியப்படுத்தினர்.
அங்கு வந்த வவுனியா நகரசபை தீயணைப்பு பிரிவினர் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்த போதும் பழ வியாபார நிலையம் முழுமையாக எரிந்து நாசமாகியுள்ளதுடன், பழங்களும் தீயில் கருகியுள்ளன.
இதேவேளை, அப்பகுதியில் மின்சாரம் தடைப்பட்டு சுமார் ஒரு மணித்தியாலத்தின் பின்னர் வந்த போதே குறித்த வர்த்தக நிலையம் தீயில் எரிந்ததை அவதானிக்க முடிந்ததாக அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் அச்சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.