இந்திய விண்வெளித்துறையில் முதல் தனியார் ரொக்கெட்டான, விக்ரம்-1 இன்று (18) ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.
இந்தியத் தனியார் நிறுவனம் தனது சொந்த விண்கலத்தை வெற்றிகரமாகச் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தியிருப்பது இதுவே முதல் முறையாகும்.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திருப்புமுனை
விக்ரம்-1 ரொக்கெட்டின் இந்த பிரம்மாண்ட வெற்றி, இந்தியத் தனியார் விண்வெளித்துறையில் ஒரு புதிய மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது.
ஆகமன்’ (வருகை) எனப் பெயரிடப்பட்ட இந்த முதல் விண்வெளிப் பயணத் திட்டம், திட்டமிட்டபடி இன்று (18) நண்பகல் 11:30 மணிக்கு ஏவப்பட இருந்தது.
ஆனால், ரொக்கெட் புறப்பட சரியாக 4 நிமிடங்கள் 59 வினாடிகள் இருந்தபோது, எதிர்பாராத தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இறுதி நேரக் கணிப்பு திடீரென நிறுத்தப்பட்டுள்ள நிலையில், ஏவுவதில் சற்று காலதாமதம் ஏற்பட்டுள்ளது.
எனினும், அங்குள்ள விண்வெளி பொறியாளர்கள் குழுவினர் உடனடியாகச் செயல்பட்டு தொழில்நுட்பக் கோளாறை விரைவாகச் சரிசெய்துள்ளனர். தொடர்ந்து, பணிகள் துரிதப்படுத்தப்பட்டு நண்பகல் 12:06 மணிக்கு விக்ரம்-1 ரொக்கெட் தீப்பிழம்புகளைக் கக்கியபடி கம்பீரமாக விண்ணில் பாய்ந்தது.
புவி ஈர்ப்பு விசையைக் கடந்து, திட்டமிட்ட பாதையில் பயணித்த இந்த ரொக்கெட் பூமிக்கு மேலே சுமார் 450 கிலோமீட்டர் உயரமுள்ள சுற்றுப்பாதையில் தனக்குள் இருந்த பல ஆய்வு கருவிகளை வெற்றிகரமாக நிலைநிறுத்தியுள்ளது.
ஐதராபாத்தைச் சேர்ந்த ‘ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்’நிறுவனம் இந்த ரொக்கெட்டை முழுமையாக வடிவமைத்து உருவாக்கியுள்ளது. முழுவதும் காபன் கலப்புக் கட்டமைப்பைக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த ரொக்கெட் 7 மாடிகள் உயரமும், பல நிலைகளையும் கொண்டது.
இது சுமார் 350 கிலோ எடை வரையிலான செயற்கைக் கோள்களை விண்வெளிக்குச் சுமந்து செல்லும் அதிநவீனத் திறன் கொண்டது. இந்திய மண்ணிலிருந்து, ஓர் இந்தியத் தனியார் நிறுவனம் தனது சொந்த விண்கலத்தை வெற்றிகரமாகச் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தியிருப்பது இதுவே முதல் முறையாகும்.

