வடமத்திய மாகாண கல்வித் திணைக்களத்தால் நடத்தப்படும் இறுதிப் பரீட்சை கணிதப்பாட வினாத்தாள்களில் பல குறைபாடுகள் இருந்ததால் தரம் 06 – 11 வரையான தமிழ் மொழி மூலமான மாணவர்களுக்கு பெரும் அநீதியை ஏற்படுத்தியுள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
வடமத்திய மாகாணத்தில் உள்ள பாடசாலைகளின் 02 பரீட்சை இந்த நாட்களில் இடம்பெற்றுவருவதுடன் அதன்படி கடந்த (12.02.2024) நடைபெற்ற கணிதப்பாட வினாத்தாள்களில் பாரிய குறைபாடுகள் இருந்ததாக ஆசிரியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
சிங்கள மொழி மூலம் கணிதப்பாடத்திற்கு தோற்றிய மாணவர்களுக்கு சரியாக தயாரிக்கப்பட்ட கணித வினாத்தாள் கிடைத்துள்ளதுடன் தமிழ் மொழியில் கல்வி கற்கும் மாணவர்களின் கணித வினாத்தாளில் பல குறைபாடுகள் இருந்துள்ளன.
குறித்த வினாத்தாள்கள் ஆசிரியர்களினால் புரிந்து கொள்ள முடியாத நிலை காணப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பில் மாகாண கல்விப்பணிப்பாளர் எஸ்.எம்.டபிள்யூ. சமரகோன் இடம் வினவிய போது,
சிங்கள மொழி மூலத்தில் வெளியிடப்பட்ட கணித வினாத்தாள்கள் தமிழ் மொழி மூலத்திற்கு மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதில் ஏதாவது குறைபாடு இடம்பெற்றிருக்கலாம். அது தொடர்பில் தேடிப்பார்த்து நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.