வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 206 சதுர கிலோமீற்றருக்கும் அதிகமான நிலப்பரப்பில் இருந்து எதிர்ப்புக் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு பொதுமக்களின் நலனுக்காக விடுவிக்கப்பட்டுள்ளன என்று நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் உள்ள மீள்குடியேற்றப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி கிட்டத்தட்ட 15 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் கண்ணிவெடிகள் அகற்றப்பட உள்ளதாகவும் அந்த பிரிவு குறிப்பிட்டுள்ளது.
கண்ணிவெடி தடை ஒப்பந்தத்தில் இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபையுடன் கைச்சாத்திட்டுள்ளது. அந்த சாசனத்தின்படி, ஜூன் 2027க்குள் நாட்டை கண்ணிவெடிகள் இல்லாத நாடாக மாற்ற வேண்டும்.
கண்ணிவெடிகளை அகற்றும் அரசாங்கத்தின் அவசர வேலைத்திட்டத்தின் பிரகாரம் 2026ஆம் ஆண்டு இறுதிக்குள் இலங்கையை கண்ணிவெடிகள் இல்லாத நாடாக மாற்ற முடியும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
அதன் தொடக்கத்தில் இருந்து, தேசிய கண்ணிவெடி நடவடிக்கை மையம் கண்ணிவெடி அகற்றும் திட்டத்தை பல்வேறு அமைச்சுக்களின் கீழ் செயல்படுத்தி தற்போது நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் செயற்பட்டு வருகிறது.
2002 ஆம் ஆண்டு தொடக்கம் கண்ணிவெடி அகற்றும் திட்டம் இலங்கை பூராக இயங்கி வருகிறது, 2010 இல் ´தேசிய கண்ணிவெடி நடவடிக்கை மையம்´ நிறுவப்பட்டது. இது கண்ணிவெடி அகற்றும் நிறுவனங்களை ஒருங்கிணைத்து வழிநடத்துகிறது. மற்றும் கண்காணிக்கிறது. இதற்கு இலங்கை இராணுவம் நேரடியாகப் பங்களிக்கிறது.
தற்போது இலங்கை இராணுவத்தின் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் பிரிவுக்கு மேலதிகமாக, இரண்டு சர்வதேச அரச சார்பற்ற கண்ணிவெடி அகற்றும் நிறுவனங்களும், இரண்டு உள்ளூர் அரச சார்பற்ற கண்ணிவெடி அகற்றும் நிறுவனங்களும் இந்நாட்டில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.
கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளுக்காக இலங்கை இராணுவத்தின் மனிதாபிமான நிலக் கண்ணிவெடி அகற்றும் பிரிவுக்கு அரசாங்கம் நிதியுதவி வழங்குகிறது.
மற்ற நான்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சர்வதேச உதவி நிறுவனங்களிடமிருந்து ஆண்டுதோறும் 17.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுகின்றன.
இதுவரை 870,412 சாதாரண கண்ணிவெடிகளும், 2,169 இராணுவத் தாங்கி எதிர்ப்பு கண்ணிவெடிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அத்துடன், வெடிக்காத 365,403 இராணுவ வெடி பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், 1,184,823 தோட்டாக்கள் மற்றும் ஏனைய சிறிய ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் மீள்குடியேற்றப் பிரிவு தெரிவித்துள்ளது.
இவ்வாறு கண்டெடுக்கப்படும் நிலக் கண்ணிவெடிகள், வெடிமருந்துகள் மற்றும் ஏனைய இராணுவ வெடி பொருட்கள் பொதுமக்களின் கைகளில் சிக்குவதைத் தடுப்பதற்காக இராணுவத்தின் வெடிகுண்டு செயலிழப்புப் பிரிவினரால் தினந்தோறும் வெடிக்கச் செய்து அழிக்கப்படுகின்றன.
நிலக் கண்ணிவெடி அகற்றல் நடவடிக்கையின் போது வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் வசிக்கும் 3000க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக, 12,000 க்கும் மேற்பட்டவர்கள் நிலத்தை அகற்றும் செயல்முறையின் மூலம் வாழ்வாதாரத்தை ஈட்ட முடிந்தது.