அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இலங்கை டெஸ்ட் குழாத்தில் இருந்து புதுமுக வீரராக அழைக்கப்பட்ட லஹிரு உதான மற்றும் விஷ்வ பெர்னாண்டோவை விடுவிப்பதற்கு தேர்வாளர்கள் தீர்மானித்துள்ளனர்.
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு உபாதையில் இருந்து மீண்டுள்ள பத்தும் நிசங்கவுடன் மேலதிக சுழற்பந்து வீச்சாளராக சகலதுறை வீரர் ரமேஷ் மெண்டில் இணைக்கப்பட்டிருக்கும் நிலையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பத்தும் நிசங்க உபாதைக்கு உள்ளான நிலையிலேயே ஆரம்ப துடுப்பாட்ட வீரராக லஹிரு உதான இலங்கைக் குழாத்தில் இணைக்கப்பட்டிருந்தார். எனினும் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் பத்துமுக்கு பதில் ஓஷத பெர்னாண்டோ இலங்கை அணியில் இடம்பெற்றிருந்தார்.
அதேபோன்று 33 வயதான இடது கை வேகப்பந்து வீச்சாளர் விஷ்வ பெர்னாண்டோ இலங்கை குழாத்தில் மேலதிக வீரராகவே இடம்பெற்றுள்ளார். முதல் டெஸ்டில் இலங்கை அணி ஒரே ஒரு வேகப்பந்து வீச்சாளராக அசித்த பெர்னாண்டோவை மாத்திரமே பயன்படுத்தியது. இலங்கை டெஸ்ட் குழாத்தில் மற்றொரு வேகப்பந்து வீச்சாளராக லஹிரு குமாரவும் இடம்பெற்றுள்ளார்.
இந்நிலையில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக காலியில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி தனது டெஸ்ட் வரலாற்றில் மிக மோசமான தோல்வியாக இன்னிங்ஸ் மற்றும் 242 ஓட்டங்களால் தோல்வியை சந்தித்தது. இதனையடுத்தே தேர்வாளர்கள் அணியில் அதிரடி மாற்றங்களை செய்துள்ளனர்.
இந்த மாற்றங்களுடன் இலங்கை குழாம் தற்போது 17 வீரர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதனை அடுத்து இலங்கை அணியினர் காலியில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இரண்டு போட்டிகளைக் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் அவுஸ்திரேலிய அணி 1–0 என முன்னிலை பெற்றிருக்கும் நிலையில் தொடர் தோல்வியை தவிர்ப்பதற்கு அடுத்த டெஸ்ட் போட்டியில் வெல்வது கட்டாயமாகும்.
இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி காலி சர்வதேச மைதானத்தில் நாளை ஆரம்பமாகவுள்ளது.