யாழில் இரு குடும்பங்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடு மோதலாக உருவெடுத்து இருவர் படுகொலை செய்த வழக்கில் பிணையில் விடுவிக்கப்பட்ட சந்தேகநபர் முச்சக்கர வண்டியினையும் விட்டு தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
யாழ். வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, சுழிபுரம் மத்தி குடாக்கனை பகுதியில் இரு குடும்பங்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடு மோதலாக உருவெடுத்து இருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இடம்பெற்றது.
இச்சம்பவத்தில் அப்பகுதியை சேர்ந்த சின்னவன் செல்வம் (55) மற்றும் இராசன் தேவராசா (32) ஆகிய இருவர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், இரட்டைக்கொலை வழக்கில் பிணையில் விடுவிக்கப்பட்ட சந்தேகநபர் குறித்த குற்றம் நிகழ்ந்த பிரதேசத்திற்கு நீதிமன்ற கட்டளையையும் மீறி பயணித்தவேளை அங்கு கொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்களை கண்டு தான் செலுத்தி வந்த முச்சக்கர வண்டியினையும் விட்டு தப்பியோடியதாக தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,
இரட்டை கொலை வழக்கில் பிணையில் இருந்த சந்தேகநபர்களுக்கு நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்ட நிலையில் குறித்த பிரதேசத்திற்கு சந்தேகநபர்கள் செல்வதற்கு நீதிமன்றம் தடைவிதித்திருந்தது.
இந்நிலையில் நீதிமன்ற தடையுத்தரவை மீறி குறித்த பிரதேசத்திற்குள் அத்துமீறி நுழைந்த சந்தேக நபர், கொலைசெய்யப்பட்டவர்களின் உறவினர்களை கண்டதும் தப்பியோடியுள்ளார்.
இந்நிலையில் வட்டுக்கோட்டை பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து குறித்த இடத்திற்கு விரைந்த பொலிசார் 21_2717 என்ற இலக்கமுடைய சந்தேக நபர்பயணித்த முச்சக்கர வண்டியினை கைப்பற்றினர்.
இது தொடர்பாக வட்டுக்கோட்டைப் பொலிசார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.