இலங்கையின் வடக்கு – கிழக்கு பகுதிகளில் இருந்து பிரித்தானியா, பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு குழந்தைகள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்த கடத்தல் சம்பவம் தொடர்பில் கொழும்பு – தெகிவளை பகுதியை சேர்ந்த ஒருவர் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட நிலையில் கடந்த 25 ஆம் திகதி விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.
17 இலங்கை சிறுவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பியதன் மூலம் சந்தேகநபர் மனித கடத்தல் குற்றச்சாட்டிற்கு உள்ளாகியிருந்தார்.
இந்நிலையில், சந்தேகநபர் தொடர்பில் விசேட விரிவான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டாளர் ஜெனரல் ஹர்ஷ இலுக்பிட்டிய உத்தரவிட்டிருந்தார்.
விசாரணை உத்தரவுக்கு அமைய இலங்கை குடிவரவுத் திணைக்களத்தின் புலனாய்வுப் பிரிவினர் சந்தேகநபரை மிகவும் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
இந்நிலையிலேயே, குறித்த நபர் கடந்த 25 ஆம் திகதி மலோசியாவில் கைது செய்யப்பட்டு, அன்றைய தினமே இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டிருந்தார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர், 2022 டிசம்பர் முதல் 2023 ஏப்ரல் வரை 17 இலங்கைக் குழந்தைகளை மலேசியாவிற்கு கடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களில் 13 குழந்தைகளின் தகவல்கள் குடிவரவு திணைக்களப் பிரிவின் அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவர்களில் எட்டுப் பேர் யாழ்ப்பாணப் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும், ஐவர் மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.
இந்த குழந்தைகள் முதலில் மலேசியாவிற்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். பின்னர், மலேசிய குழந்தைகள் என தெரிவித்து, அதற்கான ஆவணங்களை தயார் செய்து பிரித்தானியா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.