யாழ் போதனா வைத்தியசாலையில் காச்சல் காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட , 8 வயதுச் சிறுமியின் அகற்றப்பட்ட கையின் ஒரு பகுதியை உடற்கூற்றுப் பரிசோதனைக்காகக் கொழும்புப் பல்கலைக்கழகத்துக்கு அனுப்புமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கு நேற்று யாழ்ப்பாணம் மாவட்ட நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, நீதிபதி அ.ஆனந்தராஜா உத்தரவை பிறப்பித்தார்.
மல்லாகம் – பகுதியைச் சேர்ந்த 8 வயதான சிறுமி கடந்த 02ஆம் திகதி காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட சிறுமி ஒருவருக்கு கையின் ஒரு பகுதி சத்திரசிகிச்சை மூலம் துண்டிக்கப்பட்டது.
4 நாட்களாக சிறுமிக்கு காய்ச்சல் நிலவியதை அடுத்து தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்ற போதிலும் அவர் குணமடையாமையால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வைத்தியசாலையில் சிறுமிக்கு, உடலுக்கு மருந்துகளை செலுத்தும் கனுலா பொறுத்தப்பட்டு அதனூடாக மருந்துகள் செலுத்தப்பட்டுள்ளன.
கனுலா பொறுத்தப்பட்ட கை செயலிழந்தமையை அடுத்து வைத்தியர்கள் சிறுமியின் கையின் ஒரு பகுதியை சத்திரசிகிச்சை மேற்கொண்டு அகற்றி இருந்தனர்.
சிறுமியின் கை அகற்றப்பட்டமைக்கு விடுதியில் கடமையாற்றியவர்களின் அலட்சியமே காரணம் என்று சிறுமியின் பெற்றோர் யாழ்ப்பாண பொலிஸாரிடம் முறைப்பாடளித்தனர்.
இது தொடர்பான வழக்கு நேற்று யாழ்ப்பாணம் மாவட்ட நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
இதன்போது , சிறுமியின் துண்டிக்கப்பட்ட கையை கொழும்பு பல்கலைக்கழக மருத்துவபீட விசேட உடற்கூற்று நிபுணர் ஒருவர் ஊடாக உடற் கூற்றுப் பரிசோதனைக்கு உட்படுத்த காவல்துறையினர் கோரியமைக்கு அமைய நீதிமன்றம் குறித்த கட்டளையை பிறப்பித்துள்ளது.
மேலும் குறித்த வழக்கு எதிர்வரும் 11ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.