யாழ்.வலிகாமம் வடக்கில் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு செல்லும் வீதியில் 400நீளமான பகுதி படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், எந்தவொரு அனுமதியுமில்லாமல் தனியார் காணிகளுக்கு ஊடாக அமைக்கப்பட்ட தற்காலிக வீதியை நிரந்தர வீதியாக மாற்ற முயற்சிக்கப்படுகின்றது.
400 மீற்றர் நீளவும், 35 அடி அகலும் கொண்ட வீதி மற்றும் தனியார் நிலத்தை படையினர் தமது ஆக்கிரமிப்பில் தொடர்ந்தும் வைத்திருக்கின்றனர். மேலும் அந்த பகுதியை விடுவிப்பதற்கு கடந்த 5 வருடங்களுக்கும் மேலாக படையினர் தொடர்ந்தும் மறுப்பு தொிவித்து வருகின்றார்கள்.
இந்நிலையில் நேற்றைய தினம் விமானப்படையினர் சகிதம் வந்த அதிகாரிகள் ட்ரோன் மூலம் படம் பிடித்துச் சென்றதோடு இன்று 7 இற்கும் மேற்பட்ட வாகனங்களில் படையினர், வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் மற்றும் ஒப்பந்தகாரர் ஆகியோர் அப்பிரதேசத்திற்கு வருகை தந்துள்ளனர்.
இதற்கு அமைய பழைய வீதியை புனரமைக்காது படையினர் அடாத்தாக தனியார் காணிகளை ஆக்கிரமித்து அமைத்துள்ள தற்காலிக வீதியை நிரந்தர வீதியாக மாற்றுவதற்கான இரகசிய முயற்சிகள் தற்போது இடம்பெறுவதாக காணி உரிமையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.