யாழ்.வலி,வடக்கு பிரதேச ஆலயங்களிலிருந்து கொழும்புக்கு கடத்தப்பட்ட சுமார் 15ற்கும் மேற்பட்ட சிலைகளை யாழிலிருந்து கொழும்பு சென்றிருந்த விசேட பொலிஸ் குழு மீட்டிருக்கின்றது.
கடந்த சில நாட்களில் பலாலி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை உள்ளிட்ட சில பகுதிகளில் உள்ள கோவில்களில் இருந்து சாமி விக்கிரகங்கள் திருடிச் செல்லப்பட்டிருந்தது. குறித்த சிலை கடத்தல் சம்பவங்கள் தொடர்பில் நல்லிணக்கபுரம் மற்றும் நவக்கிரி பகுதிகளை சேர்ந்த சகோதரர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து கைதானவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், யாழ்ப்பாணத்தில் திருடப்படும் சிலைகள் கொழும்புக்கு கடத்தப்பட்டமை தொியவந்துள்ளது.
அதனடிப்படையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் வழங்கிய தகவல் அடிப்படையில் கொழும்பு சென்றிருந்த விசேட பொலிஸ் குழு, அங்கு சுமார் 15ற்கும் மேற்பட்ட சிலைகளை மீட்டிருக்கின்றனர்.
எனினும் சம்பவத்துடன் தொடர்புடைய வர்த்தகர் தலைமறைவாகியுள்ளதாக கூறியுள்ள பொலிஸார், மீட்கப்பட்ட விக்கிரகங்கள் யாழ்.வலி,வடக்கில் முப்படையினரின் கட்டுப்பாட்டு பகுதிகளுக்குள்ளிருந்து திருடப்பட்டவை என கூறப்படும் நிலையில், அவை, யாழ்ப்பாணம் எடுத்துவரப்படுவதாகவும் கூறப்படுகின்றது.
யாழில் அண்மைக்காலமாக ஆலயங்களில் இருந்து சிலைகல் திருட்டுபோன சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், சிலை கடத்தல் மாபியாக்கள் சிக்குவார்களா என சமூக ஆர்வலர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.