யாழ்ப்பாணம் – அராலி பகுதியில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய கணவன் வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த தாக்குதல் சம்பவம் நேற்று முன்தினம் (17-04-2024) காலை இடம்பெற்றுள்ளது.
குறித்த கணவன் – மனைவி 6 வருடங்களாக பிரிந்து இருக்கின்றனர். இந்த நிலையில் வன்னியில் வசிக்கும் மனைவி, அராலியில் உள்ள அவரது அக்காவின் வீட்டிற்கு வந்து செல்வது வழமை.
இதன்போது, தாக்குதலுக்கு உள்ளான பெண், புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக சகோதரி வீட்டுக்கு வந்திருந்த நிலையில் கணவனால் இவ்வாறு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
படுகாயமடைந்த மனைவி யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
கைது செய்த சந்தேக நபரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.