யாழ்ப்பாணம் – சுண்டுக்குளியில் உள்ள பெண்கள் பாடசாலையில் கல்வி பயில்வதாக கூறும் இரு இளம் பெண்களின் செயற்பாட்டால் மினி பேருந்து நடத்துனர் ஒருவர் கத்திக்குத்துக்கு உள்ளாகிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
கடந்த சனிக்கிழமை (21-04-2024) குறித்த இரு யுவதிகளும், நகரப்பகுதியில் நின்ற, பலாலி வீதியால் வயாவிளான் வரை செல்லும் மினி பேருந்து ஒன்றில் ஏறி இருந்துள்ளார்கள்.
பின்னர் பல தடவைகள் கீழே இறங்கி பல இடங்களுக்கும் சென்று வந்ததாக தெரியவருகின்றது. இதன் காரணமாக நடத்துனருக்கும் யுவதிகளுக்கு இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
அங்கு நின்றவர்களின் தகவல்களின்படி மினி பேருந்து நடத்துனர் யுவதிகளை தரக்குறைவாக ஏசவில்லை என்றும் யுவதிகளே அதிகமாக வாய் காட்டினார்கள் என்றும் கூறுகின்றார்கள்.
மேலும், குறித்த மாணவிகள் பாடசாலை சீருடையில் இருக்கவில்லை என்றும் அங்கிருந்தவர்கள் கூறுகின்றார்கள்.
யாழில் பாடசாலை மாணவிகளுடன் முறையற்ற விதமாக நடந்து கொண்ட தனியார் பேருந்து நடத்துனர் மீது கத்திக்குத்து தாக்குதல் நடந்த விவகாரத்தில், தனியார் பேருந்து சங்கத்தின் மிரட்டலுக்கு அஞ்சி கோப்பாய் பொலிஸார் செயற்படுவதாக பாதிக்கப்பட்ட மாணவிகள் தரப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதேவேளை, பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 19 வயதான மாணவி, எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
தமது தரப்பு முறைப்பாட்டை பொலிஸார் ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டதாக மாணவியின் உறவினர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடத்துனரை நையப்புடைத்தவர்களை கைது செய்ய வேண்டுமென வலியுறுத்தி நேற்று சில தனியார் பேருந்துகள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தன.
தாக்குதலில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்யாவிட்டால், இன்று முதல் மாவட்டம் தழுவிய பணிப்புறக்கணிப்பில் ஈடுபடப் போவதாக தனியார் போக்குவரத்துதுறை மிரட்டல் விடுத்ததாக அறிய முடிகிறது.
இதை தொடர்ந்து, நேற்று முன்தினம் பொலிசாரால் கைது செய்யப்பட்ட 19 வயதான பாடசாலை மாணவியை, குற்றத்துக்கு உடந்தையாக செயற்பட்டதாக குற்றம்சாட்டி கோப்பாய் பொலிசார் நீதிமன்றத்தில் முற்படுத்தினர்.
இதையடுத்து மாணவி 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.