யாழில் பெற்றோல் கேட்டு தொந்தரவு செய்த பொலிஸ் அதிகாரி ஒருவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ்.பருத்தித்துறை நீதிமன்றில் பாதுகாப்பு கடமைக்காக அனுப்பபட்ட பொலிஸ் உத்தியோகஸ்த்தர் ஒருவரே இவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் கடந்த புதன் கிழமை இடம்பெற்றதாக கூறப்படுகின்றது. கடமை நேரத்தில் நீதிமன்ற காவலாளியுடன் துப்பாக்கியை வைத்துவிட்டு எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளரிடம் சென்று பெற்றோல் தருமாறு தொந்தரவு செய்த நிலையில் அவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சம்பவ தினம் அன்று பருத்தித்துறை எரிபொருள் நிரப்பு நிலைய நிர்வாகி ஒருவர் பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி, பொலிஸார் சிலர் தனது எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு வந்து திரும்ப.. திரும்ப.. எரிபொருள் பெறுவதாகவும் தொந்தரவு செய்வதாகவும் முறையிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக ஆராய்ந்த பொறுப்பதிகாரி நீதிமன்ற பாதுகாப்புக்கு அனுப்பப்பட்ட பொலிஸ் உத்தியோகஸ்த்தர் ஒருவர், எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு சென்றிருப்பதை அறிந்து கொண்டனர்.
இதனையடுத்து பொறுப்பதிகாரி , உடனடியாக பருத்தித்துறை நீதிமன்றுக்கு சென்றுள்ளார். அங்கே காவலாளியுடன் அதிகாரியின் துப்பாக்கி மட்டுமேம் காணப்பட்டுள்ளது. இதனையடுத்து உடன் அமுலுக்க வரும் வகையில் குறித்த பொலிஸ் உத்தியோகஸ்த்தர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.