வேகக் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் மின் கம்பத்துடன் மோதியதில் சுழிபுரம் விக்டோரியா கல்லூரி மாணவன் ஒருவர் உயிரிந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று (5) யாழ்ப்பாணம், சுழிபுரம் சந்திப்பகுதியில் இடம்பெற்றது.
சம்பவத்தில் சுழிபுரம் விக்டோரியா கல்லூரியின் கணிதப் பிரிவில் கல்வி கற்கும் மாணவனான முருகசோதி சிறிபானுசன் என்பவரே உயிரிழந்துள்ளார்.
அவருடன் மோட்டார் சைக்கிளில் வந்த மாணவன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவத்தில் உயிரிழந்த மாணவனும், படுகாயமடைந்தவரும் மோட்டார் சைக்கிளில் மூளாய் நோக்கி பயணித்துள்ளார்.
சுழிபுரம் சந்தியில் வேகக்கட்டுபாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் மின்சார கம்பத்துடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்து தொடர்பில் கேள்வியுற்ற விபத்துக்குள்ளான மாணவர்களின் உறவினர்களும், நண்பர்களும் சம்பவ இடத்துக்கு வந்த பின்னர் காயமடைந்த இருவரையும் பட்டா ரக வாகனமொன்றில் ஏற்றி அங்கிருந்து மூளாய் கூட்டுறவு வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றனர்.
எனினும் மாணவன் உயிரிழந்திருந்த நிலையில் மாணவன் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மேலும் விபத்து சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலீஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.