யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில் போதை பாவனையில் இருந்து மீண்ட இளைஞனுக்கு மீண்டும் போதைப்பொருள் கொடுத்த உயிர் நண்பனால் , குறித்த இளைஞன் உயிரிழந்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று முன் தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
உயிரிழந்த இளைஞன் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான நிலையில் கடந்த 06 மாத கால பகுதிக்கு முன்னர், அவற்றில் இருந்து மீண்டு, வேலைக்கு சென்று வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்றுமுன்தினம் நண்பனின் அழைப்பின் பேரில் வீட்டுக்கு அருகில் உள்ள இடத்திற்கு சென்ற போது, போதை பொருளை இளைஞனுக்கு கொடுத்துள்ளார்.
நீண்ட காலமாக போதைப்பொருள் பாவனையில் இருந்து மீண்ட இளைஞன் , மீண்டும் போதைப்பொருளை பாவித்தமையால், அதீத போதை காரணமாக இளைஞனின் உடல் நிலை மோசமாகியுள்ளது.
இதையடுத்து , இளைஞனுடன் போதைப்பொருளை நுகர்ந்த மற்றைய இளைஞன் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.
இளைஞன் தாயாருக்கு தொலைபேசி அழைப்பு எடுத்து, தனது உடல்நிலை மோசமாக உள்ளதாகவும் நெஞ்சு வலிப்பதாகவும் கூறியுள்ளார்.
தாயார் இளைஞன் கூறிய இடத்திற்கு சென்று, மயங்கிய நிலையில் காணப்பட்ட தனது மகனை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் இளைஞன் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த காங்கேசன்துறை பொலிஸார், இளைஞனை அழைத்து போதைப்பொருளை கொடுத்த மற்றைய இளைஞனை கைது செய்து மருத்துவ பரிசோதனைக்காக சட்ட வைத்திய அதிகாரி முன் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.
வைத்திய அறிக்கையில் குறித்த இளைஞன் போதைப்பொருள் பாவித்தமை உறுதி செய்யப்பட்டதை அடுத்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.