யாழ்ப்பாணம் – பொன்னாலை பருத்தித்துறை பிரதான வீதியின் கல்லூண்டாய் பகுதி வீதியினை வழிமறித்து சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட நவாலி கிழக்கு கல்லூண்டாய் வெளி குடியிருப்பு மக்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 8:30 மணியளவில் இடம்பெற்ற குறித்த போராட்டத்தின்போது வீதியின் குறுக்கே அமர்ந்த பொதுமக்கள், பாடசாலைச் சிறார்கள் தண்ணீர், தண்ணீர், தண்ணீர் என கோஷங்களை எழுப்பியவண்ணம் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
சண்டிலிப்பாய் பிரதேச செயலகமே உரிய குடிதண்ணீரை ஒழுங்காக வழங்கு, மாவட்ட செயலகமே, எங்களுக்குச் சீரான நிரந்தர குடிநீரை உடனே வழங்குங்கள், எங்கள் அன்றாட அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்ய எங்கள் நலனில் உங்களுக்கு அக்கறை இல்லையா, எங்களுக்குச் சீரான தண்ணீர் விநியோகம் கிடைக்கும் வரை தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபடுவோம் எனக் கோஷமிட்டுள்ளனர்.
மேலும் பிரதேச சபை தவிசாளரே நான்கு ஆண்டுகள் கடந்துவிட்டன இன்னும் வேறு இடத்தில் மயானத்தின் அமைத்துக்கொடுக்க தங்களுக்கு இன்னும் நேரம் இல்லையா, இனி எங்கள் கிராமத்தில் உள்வரும் சடலங்களை வழிமறித்து சட்டரீதியான போராட்டத்தில் ஈடுபடுவோம், சிறு பிள்ளைகளாகிய நாங்கள் சுகாதாரமாகவும் சுத்தமாகவும் நோயற்றவர்களும் வாழ எங்கள் மீது தங்களுக்குக் கரிசனை இல்லையா, அரசு அதிகாரிகளை உங்களுக்கும் உங்களைப் போன்று சிறு பிள்ளைகள் உண்டு அல்லவா உங்களுடைய பிள்ளைகளுக்கான நீரைச் சுத்தமாக வைத்திருப்பது போல நாங்களும் மனிதப் பிறவிகள்தான் எனக் கோஷமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதையடுத்து பருத்தித்துறை பொன்னாலை வீதியில் வாகனங்கள் போக்குவரத்து செய்யமுடியாது குவிந்த நிலையில் காணப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்த மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வீதியை வழிமறித்து இருந்த மக்களிடம், பிரச்சினைக்குச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை வரவழைத்து தங்களுக்குரிய பிரச்சினைக்கான தீர்வை வழங்குவதாகத் தெரிவித்த நிலையில் விதியை வழிமறித்த மக்கள் விலகி வீதியின் அருகே நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த மானிப்பாய் பிரதேச சபையின் தவிசாளர் ஜெபனேசன், மேலதிக அரசாங்க அதிபர் எஸ் முரளிதரன், யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா, சண்டிலிப்பாய் பிரதேச செயலக பிரதேச செயலர் யசோதா உதயகுமார் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களோடு கலந்துரையாடலில் ஈடுபட்டுக் குறித்த பிரச்சினைக்கு உரிய தீர்வினை உடனடியாக பெற்றுத் தருவதாகத் தெரிவித்தனர்.
அத்துடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடியிருப்பு பகுதிக்கு நேரடியாகச் சென்று பார்வையிட்டதனை அடுத்து போராட்டம் முடிவிற்கு கொண்டு வரப்பட்டது.