கொழும்பில் வீதிகளிலும் வீதி சமிக்ஞை விளக்குகளுக்கு அருகிலும் புனிதஸ்தலங்களுக்கு அருகிலும் யாசகம் எடுப்பவர்களைத் தேடும் விசேட நடவடிக்கை பொலிஸார் நேற்று (25) ஆரம்பித்துள்ளனர்.
இவ்வாறு யாசகம் எடுப்பவர்கள் பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதாக கிடைத்த தகவலையடுத்து பொலிஸாரும் சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்பு பணியகமும் ஒன்றிணைந்து கொழும்பில் இந்த தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
தேடப்பட்ட பிரதேசம்
அத்துடன் கிருலப்பனை, நாரஹேன்பிட்டி, ராஜகிரிய, பொரளை, பத்தரமுல்லை மற்றும் தியத்த உயன போன்ற பிரதேசங்களில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குழந்தைகள் மற்றும் பாடசாலை செல்லும் சிறுவர்களையும் பாதுகாப்பற்ற முறையில் ஈடுபடுத்தி வீதிகளில் யாசகம் எடுப்பவர்களை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் இந்த தேடுதலின் போது பலர் தப்பி ஓடியுள்ளனர்.
இவர்களை கைது செய்ய பொலிஸார் பெரும் இன்னல்களுக்கு முகம் கொடுத்துள்ளனர். இதனால் அதிகாரிகளும் அவர்களால் தாக்கலுக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்த தேடுதலில் 5 குழந்தைகள் மற்றும் 2 பெண்களை விசாரிக்க சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்பு பணியக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்ததில் பலர் பிச்சைக்காரர்கள் இல்லை என்றும் பணம் சம்பாதிப்பதற்காக குழந்தைகளை இந்த நடவடிக்கையில் ஈடுபடுத்தியுள்ளதாகவும் தெரியவந்ததுள்ளது.
பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சிறுவர்கள் சிறுவர் பராமரிப்பு இல்லத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதுடன், இரு பெண்களும் அளுத்கடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.