ஜூலை 20 ஆம் திகதி நடைப்பெறவுள்ள ஜனாதிபதி பதவிக்கான தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவை (Ranil Wickremesinghe) ஆதரிக்க வேண்டும் என்ற கட்சியின் தீர்மானத்தில் எந்த மாற்றம் இல்லை என பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் (Sagara Kariyawasam) தெரிவித்துள்ளார்.
பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்க வேண்டும் என்பதே கட்சியின் பெரும்பான்மையான உறுப்பினர்களின் கருத்தாக உள்ளது என்று சாகர காரியவசம் மேலும் தெரிவித்துள்ளார்.
பொதுஜன முன்னணியின் வேட்பாளர் ஒருவர் (டலஸ்) தேர்தலில் நிற்க தீர்மானித்துள்ள நிலையில் வேறு ஒரு கட்சியின் வேட்பாளருக்கு ஆதரவளிக்க முடியாது என்பதே பொதுஜன முன்னணியின் பெரும்பாலான உறுப்பினர்களின் கருத்தாகும்.
அத்துடன் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிப்பது தொடர்பில் கட்சி என்ற ரீதியில் தாங்கள் ஒருபோதும் முடிவு செய்யவில்லை என்று பொதுஜன முன்னணியின் தலைவர் ஜீ.எல் பீரிஸ் (G.L.Peiris) உட்பட பல உறுப்பினர்கள் சாகர காரியவசத்திற்கு எதிராக போர்கொடி தூக்கி வருகின்றனர்.
இதற்கு மேலாக, சாகர காரியவசத்தின் இவ் அறிவிப்பதற்கு விளக்கம் கேட்டு ஆறு வினாக்களுடன் ஜீ.எல் பீரிஸ், சாகர காரியவசத்திற்கு கடிதம் அனுப்பியிருந்ததும் குறிப்பிடதக்கது.
இதற்கு சாகர, பதிலளிக்காத நிலையில் தமது அறிவிப்பில் மாற்றமில்லை, மொட்டு கட்சி, பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கே ஜனாதிபதி பதவிக்கான தேர்தலில் ஆதரவளிக்கும் என மீண்டும் அறிவித்துள்ளார்.