எதிர்வரும் மூன்று மாத காலத்திற்குள் மருந்து தட்டுப்பாடு தீவிரமடைந்து, பல நோயாளிகள் மருந்தில்லாமல் உயிரிழக்க நேரிடும் என நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
நாட்டில் வெளிநாட்டு கையிருப்பு வரையறுக்கப்பட்டதை தொடர்ந்து மருந்து பொருட்கள் இறக்குமதி மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதன்காரணமாக இலங்கையில் இந்த நிலை ஏற்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றையதினம் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
தற்போதைய சூழ்நிலைமையில் நாடு பாரிய நெருக்கடிகளை எதிர்க்கொண்டுள்ளது. அத்தியாவசிய உணவு பொருள் இறக்குமி, உணவு பொருள் விநியோகத்துடன் தற்போது மருந்துபொருட்களுக்கும் தட்டுப்பாடு நிலவுவதை அவதானிக்க முடிகிறது.
டொலர் நெருக்கடி நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்ற காரணத்தினால் ஒளடத இறக்குமதியாளர்கள் பாரிய நெருக்கடியினை தற்போது எதிர்க்கொள்கிறார்கள்.
மருந்து இறக்குமதிக்கான கடன் பற்று பத்திரங்களை வெளியிட முடியாத நிலை காணப்படுகிறது. பெனடோல் குழிசைகளுக்கும் தட்டுப்பாடு காணப்படுகிறது. இதனால் சாதாரண நடுத்தர மக்களின் சுகாதார பாதுகாப்பு கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.