முல்லைத்தீவு, வட்டுவாகல் பகுதியில் பொதுமக்களின் காணிகளை கடற்படையின் தேவைக்காக சுவீகரிப்பதற்காக, அளவீடு செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சி, பிரதேசவாசிகள் மற்றும் பிரமுகர்கள் சிலரால் இன்று தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
வட்டுவாகல், கோட்டாபய கடற்படை தளம் அமைந்துள்ள காணிகளில், பொதுமக்களிற்கு சொந்தமான காணிகளும் உள்ளன. அந்த காணிகளை நிரந்தரமாக சுவீகரித்து, கடற்படை தளம் அமைப்பதற்கான முயற்சியில் நீண்டகாலமாக கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர். எனினும் மக்களின் எதிர்ப்பார் அவர்களின் ஆக்கிரப்பு கைகூடவில்லை.
இந்த நிலையில், கடற்படை முகாம் அமைந்துள்ள காணிகளிற்கு சொந்தமான சிலர், தமது காணிகளை கடற்படையினருக்கு வழங்க சம்மதம் தெரிவித்துள்ளனர்.
அவர்களில் இரண்டு சிங்களவர்கள், ஒரு சீனர், மற்றும் சில உள்ளூர் மக்களும் காணிகளை கையளிக்க சம்மதம் தெரிவித்துள்ளனர். குறித்த காணிகளை அளவீடு செய்யும் நடவடிக்கை கடந்த மே மாதம் 10ஆம் திகதி திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், அன்று ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டிருந்ததால், அளவீடு நடைபெறவில்லை.
இந்த நிலையில் இன்று கணி அளவீடு இடம்பெறவிருந்த நிலையில் , ஏனைய காணி உரிமையாளர்களிற்கு அது பற்றி அறிவிக்கப்படவில்லை. இதனையடுத்து இன்று காணி அளவீட்டிற்காக நில அளவை திணைக்களத்தினர் வந்த போது, அரசியல் பிரமுகர்களும், பிரதேசவாசிகளும் கூடி அதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் , நில அளவைத்திணைக்களத்தினர் அங்கிருந்து திரும்பிச் சென்றுள்ளனர்.
மேலும் இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் முன்னாள் வடக்கு விவசாய அமைச்சர் க.சிவநேசன், வலி வடக்கு பிரதேசசபை உறுப்பினர்எஸ்.சஜீவன், முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் ஆகிய அரசியல் பிரமுகர்களும், பொதுமக்களும் ஈடுபட்டனர்.