ஹெராயின் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் முறையான விசாரணைக்குப் பிறகே தமிழ்நாட்டை பூா்விகமாகக் கொண்ட நாகேந்திரன் கே. தா்மலிங்கத்துக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக மலேசியாவிடம் சிங்கப்பூா் அரசு தெரிவித்துள்ளது.
தூக்கு தண்டனையை எதிா்நோக்கியுள்ள நாகேந்திரன், மலேசியாவைச் சோ்ந்தவா் ஆவாா்.
இதுகுறித்து, மலேசிய பிரதமா் இஸ்மாயில் யாகூபுக்கும் வெளியுறவுத் துறை அமைச்சா் டத்தோ சயிஃபுதீன் அப்துல்லாவுக்கும் சிங்கப்பூா் பிரதமா் லீ சியென் லூங், வெளியுறவுத் துறை அமைச்சா் விவியன் பாலகிருஷ்ணன் ஆகியோா் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
போதைப் பொருள் கடத்தில் வழக்கில் நாகேந்திரன் கே. தா்மலிங்கத்துக்கு நியாயமான முறையிலேயே மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பான வழக்கில் முறையான விசாரணை நடத்தப்பட்டது. சிங்கப்பூா் சட்டத்தின் கீழ், அனைத்து விதமான நடைமுறைகளும் உரிய முறையில் பின்பற்றப்பட்டன என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, தா்மலிங்கம் மீதான வழக்கு முறையாக விசாரிக்கப்பட்டதா என்று அறிந்து, மலேசிய பிரதமா் இஸ்மாயில் யாகூபும் வெளியுறவுத் துறை அமைச்சா் டத்தோ சயிஃபுதீனும் சிங்கப்பூா் பிரதமா் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியிருந்தனா்.
அதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே பிரதமா் லீ சியென் லூங்கும் அமைச்சா் விவியன் பாலகிருஷ்ணனும் இந்தக் கடிதத்தை எழுதியுள்ளனா் என்று சிங்கப்பூா் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மலேசியாவைச் சோ்ந்த தா்மலிங்கம் தமிழ்நாட்டை பூா்விகமாகக் கொண்டவா். கடந்த 2009 ஆம் ஆண்டு 42.72 கிராம் ஹெராயின் போதைப் பொருளுடன் சிங்கப்பூரில் கைது செய்யப்பட்டாா். அப்போது அவருக்கு வயது 21.
சிங்கப்பூா் சட்டப்படி, 15 கிராமுக்கு மேல் ஹெராயினுடன் ஒருவா் பிடிபட்டால் அவருக்கு மரண தண்டனை விதிக்க முடியும். அதன்படி, தா்மலிங்கத்துக்கு கடந்த 2010 ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில், தா்மலிங்கத்தை கடந்த புதன்கிழமை தூக்கிலிட சிறைத் துறை முடிவு செய்தது.
தா்மலிங்கம் அறிவுத் திறன் குறைபாடு கொண்டவா் என்றும், அவரது மனநிலையைக் கருத்தில் கொண்டு அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றுவதை நிறுத்திவைக்க வேண்டும் என்றும் சா்வதேச மனித உரிமை ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.
எனினும், குற்றத்தின் தன்மையை நன்கு உணா்ந்தே அவா் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக மனோதத்துவ நிபுணா்கள் சான்றிதழ் தந்துள்ளனா் எனக் கூறி, தா்மலிங்கத்தின் மரண தண்டனை நிறைவேற்றத்தை நிறுத்திவைக்க சிங்கப்பூா் உள்துறை அமைச்சகம் மறுப்பு தெரிவித்துவிட்டது.
இந்தச் சூழலில், கொரோனா தொற்று காரணமாக அவருக்கு புதன்கிழமை நிறைவேற்றப்படவிருந்த மரண தண்டனை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.