உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், முதல் முறையாக புதிய கின்சல் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை பயன்படுத்தி தாக்குதல்களை நடத்தியுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
பெப்ரவரி 24ம் திகதி உக்ரைனுக்குள் தனது படைகளை அனுப்பிய பின்னர், ஹைப்பர்சோனிக் கின்சல் அமைப்பை ரஷ்யா பயன்படுத்தியது இதுவே முதல் முறை என்று ரஷ்யாவின் இன்டர்ஃபாக்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்து வரும் போரானது தொடர்ந்து 24வது நாளாக நீடித்துள்ள நிலையில், 800க்கும் மேற்பட்ட பொது மக்கள் உயிரிழந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தனது புதிய கின்சல் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை முதன்முறையாக உக்ரைனின் மேற்கில் உள்ள ஆயுதங்கள் சேமிப்பு கிடங்கை அழிக்க பயன்படுத்தியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
2018ம் ஆண்டில் புதின் தனது தேசிய உரையில் வெளியிட்ட புதிய ஆயுதங்களின் வரிசையில் கின்சல் ஏவுகணையும் ஒன்றாகும். இது ஒலியை விட 10 மடங்கு வேகத்தில் பறக்கும் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகளை முறியடிக்கக்கூடிய கின்சல் (டாகர்) ஏவுகணை ஆகும்.
இதுகுறித்து ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“ஹைப்பர்சோனிக் ஏரோ பாலிஸ்டிக் ஏவுகணைகள் கொண்ட கின்சல் ஏவியேஷன் ஏவுகணை அமைப்பு, இவானோ-பிரான்கிவ்ஸ்க் பகுதியில் உள்ள டெலியாட்டின் கிராமத்தில் ஏவுகணைகள் மற்றும் விமான வெடிமருந்துகள் அடங்கிய பெரிய நிலத்தடி கிடங்கை அழித்தது” என்று தெரிவித்துள்ளது.