முதலாவதாக 83 ஜூலை ஒர் இனக்கலவரம் அல்ல. இனக்கலவரம் என்றால் பரஸ்பரம் மோதிக்கொள்ள வேண்டும். அது இன அழிப்பு.நிராயுத பாணிகளாக இருந்த கொழும்பில் வசித்த தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட திட்டமிட்ட ஒரு தாக்குதல். அது திட்டமிடப்பட்டது என்பது முதலாவது. பின்னணியில் அரசு தரப்பைச் சேர்ந்த பிரமுகர்கள் இருந்தார்கள் என்பது இரண்டாவது. எனவே அது தன்னெழுச்சியாக தோன்றவில்லை. அதற்குப்பின் திட்டமிட்டு ஒரு தரப்பு உழைத்தது. தமிழ் மக்களுக்கு ஒரு பாடம் படிப்பிக்க வேண்டும் என்ற ஒர் உள்நோக்கம் அங்கே இருந்தது. அதோடு தமிழ் மக்களின் பொருளாதார வளர்ச்சி காரணமாக தூண்டப்பட்ட பொறாமையை தீர்த்துக்கொள்ள ஒரு சந்தர்ப்பம் தேவைப்பட்டது. இவ்வாறு எல்லாக் காரணிகளும் இணைந்த பொழுது நன்கு திட்டமிட்டு, தேவையான தகவல்கள் திரட்டப்பட்டு, தேவையான ஆட்கள் திரட்டப்பட்டு,அரசாங்கத்தைச் சேர்ந்த சில பிரமுகர்களால் ஊக்குவிக்கப்பட்ட ஒரு தாக்குதல் நடவடிக்கை அது.எனவே அதனை தன்னியியல்பான கலவரம் என்றெல்லாம் அழைக்க முடியாது. அது திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்ட ஒரு இன அழிப்புச் செயற்பாடு.
ஆனால் அந்தப் பழிவாங்கல் அல்லது இன அழிப்பு நடவடிக்கை நாட்டை எங்கே கொண்டு வந்து விட்டது ?
முதலாவதாக, நாடு வெளிச் சக்திகளுக்கு திறந்து விடப்பட்டது.முதலில் இந்தியா தலையிட்டது. இந்தியா ஒருபுறம் அரசுக்கும் அரசுக்கும் இடையிலான உறவுகளின் ஊடாக இலங்கைக்கு விசேஷ தூதுவர்களை அனுப்பியது. இன்னொருபுறம் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்ட கொந்தளிப்பான உளவியலின் பின்னணியில் அங்கு ஏற்கனவே காணப்பட்ட ஆயுதப் போராட்ட அமைப்புகளை இந்தியா ஊக்குவித்தது. தமிழகத்தை ஈழப் போராட்டத்தின்பின் தளமாக திறந்துவிட்டது. அதன் விளைவாக ஆயுதப் போராட்ட இயக்கங்களுக்கு பயிற்சியும் ஏனைய வசதிகளும் அங்கு கிடைத்தன. அதனால் ஈழப் போராட்டம் திடீரென்று வீங்கியது. இங்கு வீக்கம் என்ற சொல் என்னுடையது அல்ல. அது ஏற்கனவே விமர்சகர்களால் பயன்படுத்தப்பட்ட ஒரு சொல். 70களில் தொடங்கி 83 வரையிலும் தமிழ் மக்களுடைய ஆயுதப் போராட்டம் படிப்படையாக மெல்ல மெல்ல வளர்ந்துவந்தது. ஆனால் 83 ஜூலைக்குப் பின் அந்த வளர்ச்சி இயல்பானதோ அல்லது படிப்படியானதோ அல்ல. அது அசாதாரணமான ஒரு வளர்ச்சி. அதனால்தான் அதனை வீக்கம் என்று அழைக்க வேண்டி இருக்கிறது. அந்த வீக்கத்தின் விளைவுதான் போராட்டத்தில் பின்னர் ஏற்பட்ட பல குழப்பங்களும் வீழ்ச்சிகளும் ஆகும்.
இவ்வாறு ஈழப் போராட்டத்தில் முதலாவது பிராந்தியத் தலையீடு ஏற்பட்டது 83 ஜூலையின் விளைவாகத்தான். அங்கிருந்து தொடங்கி கடந்த 42 ஆண்டுகளாக இலங்கைத் தீவு வெளியாருக்கு திறந்து விடப்பட்ட ஒரு தீவாகத்தான் காணப்படுகின்றது. முதலில் இனப்பிரச்சினை பிராந்தியமயப்பட்டது. அடுத்த கட்டமாக அது அனைத்துலக மயப்பட்டது. இப்பொழுது இனப்பிரச்சினை அனைத்துலக மயப்பட்ட ஒரு பிரச்சினை. இலங்கை அரசாங்கம் கடந்த 16 ஆண்டுகளாக ஐநாவில் நிறுத்தப்பட்டிருக்கிறது. ஓர் அரசுடைய தரப்பாக அதனை அவர்கள் சமாளிக்க முடிகிறது.உள்நாட்டுப் பொறி முறையை வலியுறுத்துவதன் மூலமும் ஐநா தீர்மானங்களை நிராகரிப்பதன் மூலமும் இலங்கை அரசாங்கம் இனப்பிரச்சினையை அனைத்துலக மய நீக்கம் செய்ய முற்படுகிறது.ஆனாலும் யதார்த்தத்தில் இனப்பிரச்சினை அனைத்துலக மயப்பட்டு விட்டது. இதை அதன் கூர்மையான வார்த்தைகளில் சொன்னால் இலங்கை வெளிச் சக்திகளுக்கு திறந்து விடப்பட்டு விட்டது.
முதலில் அப்போது இருந்த ஜனாதிபதி ஜெயவர்த்தன மேற்கத்திய கூலிப்படைகளை நாட்டுக்குள் இறக்கினார். மேற்கத்திய ஆயுத தளபாடங்களை நாட்டுக்கு இறக்கினார். மேற்கத்திய ராணுவ ஆலோசகர்களை நாட்டிற்குள் இறக்கினார். அதேசமயம் ஈழத் தமிழ் அகதிகள் இந்தியாவை நோக்கிச் சென்றார்கள். ஐரோப்பாவெங்கும் படர்ந்து சென்றார்கள். முதலாம் கட்டமாக ஈழப் போர் பிராந்திய மையப்பட்டதன் விளைவாக இந்திய அமைதி காக்கும் படை நாட்டுக்குள் இறங்கியது. இந்திய இலங்கை உடன்படிக்கை எழுதப்பட்டது.
இரண்டாம் கட்டம், ஈழப்போர் அனைத்துலக மயப்பட்டது. நோர்வியின் அனுசரணையுடனான சமாதான முயற்சிகளின்போது ஸ்கன்டினேவிய நாடுகளைச் சேர்ந்த யுத்த நிறுத்தக் கண்காணிப்பு குழுவினர் நாட்டுக்குள் இறக்கப்பட்டார்கள்.உலகின் வெவ்வேறு தலைநகரங்களில் பேச்சு வார்த்தைகள் இடம்பெற்றன.
அடுத்த கட்டம் 2009க்கு பின். கடந்த 16 ஆண்டுகளாக இலங்கை அரசாங்கங்கள் ஐநாவுக்கு பொறுப்பு கூற வேண்டியிருக்கிறது.
இப்பொழுது ஈழப் போர் இல்லை. ஆனால் அதன் விளைவாக உருவாக்கப்பட்ட இந்திய இலங்கை உடன்படிக்கையின் எச்சமாகிய 13ஆவது திருத்தம் யாப்பில் உண்டு. இது முதலாவது விளைவு. இரண்டாவது விளைவாக சீனா இச்சிறிய தீவுக்குள் இறங்கிவிட்டது.அம்பாந்தோட்டையிலும் இலங்கைத் தீவின் தலைநகரக் கடலில் சீனப்பட்டினத்தில் சீனா நிரந்தரமாகக் காலூன்றி விட்டது.
புவிசார் அரசியலின் அடிப்படையில் இந்த பிராந்தியம் இந்தியாவின் செல்வாக்கு மண்டலத்துக்குள் காணப்படுகிறது. ஆனால் இந்தப் பிராந்தியத்தில் இலங்கைத் தீவில் இருந்து 400 கடல் மைல் தொலைவில் உள்ள சீனா தீவுக்குள் இறங்கிவிட்டது.எனவே பிராந்தியத்துக்குள் தனது மேலாண்மையைப் பேணவேண்டிய நிர்பந்தம் இந்தியாவுக்கு ஏற்பட்டிருக்கிறது. இவ்வாறு பிராந்தியத்தில் உள்ள இரண்டு பேரரசுகளின் இழு விசைகளுக்குள் இப்பொழுது இலங்கை சிக்கியிருக்கிறது. அதாவது இலங்கை இப்பொழுது இறைமை உடைய ஒரு தீவு அல்ல. அது பிராந்திய மற்றும் பூகோள பேரரசுகளின் இழு விசைகளுக்குள் சிக்கியிருக்கும் ஒரு தீவு. கலைத்துவமாகச் சொன்னால் பேரரசுகளால் பங்கிடப்படும் ஓர் அப்பம்.
யுத்தத்தை வென்று அதன் அடுத்த கட்டமாக யுத்த வெற்றி வாதத்திற்கு தலைமை தாங்கிய ராஜபக்ச குடும்பத்தை அவர்களுக்கு வாக்களித்த சொந்த மக்களே ஆட்சியில் இருந்து அகற்றித் துரத்தினார்கள். சில ஆண்டுகளுக்கு முன் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட பொழுது சிங்கள மக்கள் அதிகமாக புலம் பெயர்ந்தார்கள்.லட்சக்கணக்கான சிங்கள மக்கள் இதுவரை புலம்பெயர்ந்து விட்டார்கள்.யுத்தத்தின் விளைவே பொருளாதார நெருக்கடு.இப்பொழுது யுத்தத்தில் வென்றெடுத்த நாடு தமிழ் மக்களுக்கும் சொந்தமில்லை; சிங்கள மக்களுக்கும் சொந்தமில்லை; முஸ்லிம் மக்களுக்கும் சொந்தமில்லை.
2009 க்குப் பின் முஸ்லிம்களுடைய சொத்துக்களும் முதலீடுகளும் திட்டமிட்டுத் தாக்கப்பட்டன. 83 ஜூலை போல. அதன் விளைவாக முஸ்லிம் மக்கள் மத்தியிலிருந்தும் குறிப்பிடத்தக்க அளவுக்கு பெரு வணிகர்கள் நாட்டை விட்டு வெளியேறி விட்டார்கள்.அல்லது தங்களுடைய முதலீடுகளை வெளியே நகர்த்தி விட்டார்கள். தொடர்ந்து வந்த ஈஸ்டர் குண்டு வெடிப்பின் பின்னணியில் முஸ்லிம்கள் இந்த நாடு தங்களுக்கு பாதுகாப்பானது என்ற உணர்வை இழந்து விட்டார்கள்.
எனவே தொகுத்துப் பார்த்தால், யுத்தத்தில் வென்ற நாடு ஏனைய எல்லாவற்றிலுமே தோற்றுவிட்டது. மிகக்குறிப்பாக அதன் இறைமையை இழந்து விட்டது. இப்பொழுது அது ஒரு பேரரசுகள் பங்கிடும் அப்பம். 83 ஜூலையிலிருந்து இந்திய தலையீட்டில் தொடங்கி இப்பொழுது அம்பாந்தோட்டையிலும் நாட்டின் தலைநகரத்திலும் சீனா நிரந்தரமாக தங்கி விட்டது. இன்னொரு புறம் ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை பொறுப்புக் கூற வேண்டிய நிலை.
இது முதலாவது. இரண்டாவது, ஜூலை 83 விளைவாக தமிழ் மக்களுடைய ஆயுதப் போராட்டம் விரிவடைந்தது.ஒரு கட்டத்தில் நாட்டில் இரண்டு அதிகாரம் மையங்கள் இருந்ததை ஏற்றுக்கொண்டு ரணில்-பிரபாகரன் உடன்படிக்கை செய்ய வேண்டி வந்தது. அதாவது 83 ஜூலையில் தமிழ் மக்களுக்கு ஒரு பாடம் படிப்பிக்க வேண்டும், தமிழ் மக்களை பழிவாங்க வேண்டும்,என்று சிந்தித்து திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட இனஅழிப்பானது தமிழ் மக்களை மேலும் கொதித்து எழச் செய்ததே தவிர அவர்களைப் பணிய வைக்கவில்லை. விளைவாக லட்சக்கணக்கானவர்கள் கொல்லப்படும் ஒரு யுத்த களம் திறக்கப்பட்டது. அனைத்துலக அரங்கில் இலங்கைத் தீவு அவமதிக்கப்பட்டது.தேரவாத பௌத்தத்தின் ஒரே சேமிப்பிடம் என்று தன்னைப் பெருமையாகக் கூறிக் கொள்ளும் ஒரு தீவு இந்த நூற்றாண்டின் முதலாவது பெரிய இன அழிப்புக் களமாக மாறியது. காணாமல் ஆக்கப்பட்டவர்களை அதிகமுடைய ஒரு தீவாக மாறியது.இந்த நாட்டின் முக்கிய படைத் தளபதிகளும் யுத்தத்தில் வென்ற குடும்பமும் அமெரிக்க கண்டத்துக்கு போக முடியாது. பிரித்தானியாவுக்கும் போக முடியாது.அதாவது 83 ஜூலை எந்த நோக்கத்தில் அடிப்படையில் திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்டதோ, அந்த நோக்கம் நிறைவேறவில்லை. தமிழ் மக்களின் எதிர்ப்பைத் தடுத்து நிறுத்த முடியவில்லை.இது இரண்டாவது விளைவு.
மூன்றாவது விளைவு,போரின் விளைவாக தமிழ் மக்கள் புலம்பெயர்ந்தார்கள். 10 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் புலம்பெயர்ந்து விட்டார்கள். இது தமிழ் மக்களின் மொத்த ஜனத்தொகைக்குள் மூன்றில் ஒன்றுக்கு கிட்ட வரும். விளைவாக ஈழத் தமிழ் சமூகம் கடந்த இரண்டு தசாப்தங்களிலும் படிப்படியாக உலகில் மிகப் பலமான, மிகத்துடிப்பான, வினைத்திறன் மிக்க ஒரு புலம்பெயர் சமூகமாக எழுச்சி பெற்றிருக்கிறது.
2009க்குப் பின் தோல்வியை ஒப்புக் கொள்ளாது தொடர்ந்து போராடும் ஒரு சமூகமாகவும் அது காணப்படுகிறது. நிதி ரீதியாக பலம் வாய்ந்த, சில நாடுகளின் முடிவெடுக்கும் ராஜதந்திரிகள் மத்தியில் செல்வாக்குமிக்க, ஒரு சமூகமாக புலம் பெயர்ந்த தமிழ் சமூகம் வளர்ந்து வருகின்றது.
புலப்பெயர்ச்சியின் விளைவாக எழுச்சிபெற்ற தமிழ் முதலாளிகள் தமிழகத்தின் திரைத்துறை மையமாகிய கோடம்பாக்கத்தில் முதலீடு செய்யும் ஒரு வளர்ச்சியைப் பெற்று விட்டார்கள்.உலகம் முழுவதிலும் அவர்கள் வெற்றிகரமான முதலீட்டாளர்களாகத் தங்களைத் தொடர்ந்து ஸ்தாபித்து வருகிறார்கள்.அவர்களிற் சிலர் இலங்கைக்குள்ளும் திரும்பி வந்து விட்டார்கள். இங்கே அவர்கள் சிங்கள மக்கள் மத்தியில் வங்குரோத்தாகி வரும் சொத்துக்களை விலைக்கு வாங்கி வருகிறார்கள். இலங்கை ரூபாய்களோடு காணப்பட்ட தமிழர்களை கொழும்பிலிருந்து அகற்றுவதற்கு 83 ஜூலை முன்னெடுக்கப்பட்டது. ஆனால் அதே தமிழர்கள் இப்பொழுது டொலர்களோடும் பவுன்ஸ்சோடும் யூரோக்களோடும் நாட்டுக்குள் திரும்பி வருகிறார்கள். அவர்கள் கொழும்பிலும் நாட்டின் ஏனைய பாகங்களிலும் முதலீடு செய்யக்கூடிய, நிதிப் பலமிக்க ஒரு சமூகமாக எழுச்சிபெற்று விட்டார்கள்.
அதாவது தமிழ் மக்களின் பொருளாதார எழுச்சியைக் கண்டு, புத்திசாலித்தனத்தைக் கண்டு,கெட்டித்தனத்தை கண்டு, பொறாமை கொண்டு தென்னிலங்கையில் அவர்களுடைய சொத்துக்களை அழித்தார்கள். ஆனால் 42 ஆண்டுகளின் பின் இப்பொழுது தமிழ் மக்கள் தென்னிலங்கையில் வங்குரோத்தான சிங்கள முதலாளிகளின் சொத்துக்களை வாங்கும் ஒரு வளர்ச்சிக்கு வந்து விட்டார்கள். இது 83 ஜூலை மாதம் இன அழிப்பை செய்தவர்கள் எதிர்பாராத ஒரு வளர்ச்சி. அவர்கள் தென்னிலங்கையில் இருந்து துரத்திய மக்கள் இப்பொழுது உலகம் முழுவதும் படர்ந்து,பலம் வாய்ந்த ஒரு சமூகமாக,நிதிப் பலம் மிக்க ஒரு சமூகமாக எழுச்சி பெற்று விட்டார்கள்.இது மூன்றாவது முக்கிய விளைவு.
எனவே 83 ஜூலை விளைவுகளைத் தொகுத்துப் பார்த்தால் இலங்கைத் தீவு பெற்றவைகளை விட இழந்தவைகளே அதிகம். அது இழந்தவைகளுக்குள் அதன் இறைமையும் அடங்கும்.