முட்டை தட்டுப்பாட்டால் எதிர்வரும் மூன்று நாட்களில் நாட்டிலுள்ள சிற்றுண்டிச் சாலைகளை மூடக்கூடிய நிலைமை உருவாகியுள்ளதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்தவிடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்துள்ள அந்த சங்கத்தின் தலைவர் அசேல சம்பத், சந்தையில் ஏற்பட்டுள்ள முட்டை தட்டுப்பாட்டை தீர்ப்பதற்கு அரசாங்கம் மற்றும் உற்பத்தியாளர்கள் உரிய வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
கட்டுப்பாட்டு விலையை விடவும் அதிக விலைக்கு முட்டையை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக நுகர்வோர் அதிகார சபை சுற்றிவளைப்புகளை முன்னெடுத்து பாரிய தொகை அபராதங்களை விதிக்கிறது. இது சிறந்ததொரு விடயமாகும்.
இந்தநிலையில் தற்போது ஏற்பட்டுள்ள முட்டை தட்டுப்பாடு பிரச்சினைக்கு உற்பத்தியாளர்கள், அது சார்ந்த சங்கத்தினர் மற்றும் அரசாங்க பிரதிநிதிகள் ஒன்றாக கலந்துரையாடி உடனடியாக உரிய தீர்வை வழங்க வேண்டும் என சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அரசாங்கத்தினால் முட்டைக்காக உச்சபட்ச சில்லறை விலை 50 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், முட்டை விற்பனை செய்யாத வர்த்தக நிலையங்கள் தொடர்பில், தொடர்ந்தும் சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதன்போது, தாம் முட்டைகளை 52 ரூபாய்க்கு மொத்த சந்தையில் பெற்றுக்கொள்வதால், அரசாங்கம் நிர்ணயித்துள்ள 50 ரூபா நிர்ணய விலைக்கு விற்பனை செய்ய முடியாத நிலை காணப்படுவதாக வர்த்தக நிலைய உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்