முட்டை இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
முட்டை இறக்குமதி மற்றும் கால்நடை அபிவிருத்திக்கான எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடல் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் நேற்று (16) விவசாய அமைச்சில் நடைபெற்றது.
இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் பேக்கரி தொழிலுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார்.
அவற்றை பொது பாவனைக்காக கடைகளில் விற்பனை செய்ய அனுமதிக்கக் கூடாது எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
பறவைக் காய்ச்சல் இலங்கைக்குள் நுழைவதைத் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும், இக்கலந்துரையாடலில், பேக்கரி தொழிலில் முட்டைகளை பயன்படுத்துவது தொடர்பாக வழிகாட்டுதல்களை உடனடியாக தயாரிக்குமாறும் அமைச்சர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இதன்படி, பேக்கரித் தொழிலில் முட்டைகளைப் பயன்படுத்தும்போது கையுறைகளைப் பயன்படுத்தவும், முட்டை ஓடுகளை பாதுகாப்பாக அப்புறப்படுத்தவும் அல்லது அழிக்கவும், மீதமுள்ள முட்டை ஓடுகள் சுற்றுச்சூழலுக்கு வெளியிடப்படாமல் இருப்பதை உறுதி செய்யவும் அமைச்சர் மேலும் அறிவுறுத்தினார்.
கடந்த பருவத்தில் இந்த நாட்டு நுகர்வோரை பாதித்த முட்டை தட்டுப்பாட்டைக் குறைப்பதற்காக முட்டைகளை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
நாட்டில் உள்ள முட்டைகளின் தட்டுப்பாடு மற்றும் தேவையை கருத்தில் கொண்டு தற்காலிகமாக முட்டைகளை இறக்குமதி செய்ய கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் அனுமதி வழங்கியதை அடுத்து இது இடம்பெற்றுள்ளது.