ஹட்டன் – மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் முச்சக்கரவண்டியும், சிறிய ரக லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து சம்பவமானது மஸ்கெலியா, நல்லதண்ணி பிரதான வீதியில் பிரவுன்லோ தோட்டப் பகுதியில் இன்று (10.08.2024) மாலை 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
நல்லதண்ணியிலிருந்து மஸ்கெலியா நோக்கி பால் ஏற்றிச் சென்ற லொறி ஒன்றும், மஸ்கெலியாவிலிருந்து நல்லதண்ணியை நோக்கி அதிவேகமாகச் சென்ற முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளதுடன், முச்சக்கரவண்டியின் சாரதி மற்றும் ஒருவர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்நிலையில், படுகாயமடைந்த இருவரும் மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், இந்த விபத்தில் முச்சக்கரவண்டி மற்றும் குறித்த லொறியும் பாரியளவில் சேதமடைந்துள்ளதுடன், விபத்து காரணமாக வீதியின் போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது.
மேலும், இவ்விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.