பிரபாகரனின் படத்தை முகநூலில் பதிவிட்டதால் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மட்டக்களப்பை சேர்ந்த குடும்பஸ்த்தர் 14 மாதத்தின் பின்னர் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
வாகரை, புளியங்கண்டலடியைசேர்ந்த கு.விஜயதாஸ் (30) என்பவரே இவ்வாறு பிணையில் விடுதலை செய்யப்பட்டார். மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் இவ் வழக்கு இன்று காலை எடுத்துக்கொள்ளப்பட்டபோது நிபந்தனைகளுடன் பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.
முகப் புத்தகத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க தலைவரின் உருவம் அடங்கிய புகைப்படத்தினை பதிவிட்டார் என்ற குற்றச்சாட்டில் கடந்த , 27.11.2020 ஆம் திகதி வாகரை பொலிசாரால் குறித்த நபர் கைது செய்யப்பட்டிருந்தார்.
ஒரு பிள்ளையின் தந்தையான குறித்த கடந்த 14 மாதங்களாக தடுப்புக்காலில் வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான ஒரு சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமையில் வாகரை பொலிஸ் நிலையத்திற்கு சென்று காலை 9 மணிமுதல் 12 மணிக்குள் கையொப்பமிட வேண்டும் என்ற நிபந்தனையும் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டுள்ளது.