மீனவ சமூகத்தினரின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையில் எதிர்காலத்தில் நாடாளுமன்றத்தில் மீன்பிடி சட்டமூலம் முன்வைப்பதாக கடற்றொழில் அமைச்சர் டக்லஸ் தேவாநந்தா நேற்று (2023.12.11) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
கடற்றொழில் அமைச்சின் செலவினத் தலைப்பு மீதான நாடாளுமன்ற விவாதத்தில் நேற்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே கடற்றொழில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இந்த சட்டமூலத்தை முதலில் தயாரித்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்க உள்ளதாகவும் மேலும், கடற்றொழில் துறை நிபுணர்களுடன் கலந்துரையாடி உரிய திருத்தங்களை மேற்கொள்வதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
நாடு முழுவதும் கடல் சூழ்ந்துள்ள போதிலும் நாட்டிற்கு கருவாடு இறக்குமதி செய்வது தொடர்பில் எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கருவாடுகளை மொத்தமாக வைத்தியசாலைகளுக்கும் இராணுவத்திற்கும் வழங்குவதாக தெரிவித்துள்ளார்.
உள்நாட்டில் கிடைக்கும் சூடை போன்ற மீன்கள் அதற்கு ஏற்றதல்ல என்றும் அவர் சுட்டிக் காட்டினார். மேலும் உள்நாட்டு மீன்கள் குறைவாக இருக்கும் ஏப்ரல் முதல் ஜூலை வரையான மாதங்களில் மீன்களை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஜனவரி முதல் செப்டெம்பர் மாதம் வரையான காலப்பகுதியில், 293,880 மெற்றிக் டொன் மீன் கிடைத்துள்ளது.
மீன் உற்பத்தியை அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவித்த அமைச்சர், மீன்பிடி படகுகளுக்கு தேவையான எரிபொருள் கிடைக்காமை மற்றும் மண்ணெண்ணெய் விலை அதிகரிப்பு என்பன பிரதான பிரச்சினைகளாகும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிறிய மற்றும் நடுத்தர மீனவ சமூகத்திற்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்திய மீன்பிடி படகுகள் அத்துமீறி நாட்டுக்குட்பட்ட கடற்பரப்பில் மீன்பிடித்தல் தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர், இந்த விடயத்தை நாடுகளுக்கு இடையேயான அடிப்படையில் தீர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று கூட இந்த டோலர் கப்பல்கள் அனுமதியின்றி நமது கடலுக்குள் நுழைந்துள்ளன. அந்த நபர்கள் கைது செய்யப்பட்டனர். அப்போது கடற்படை தமக்கு எதிராகச் செயற்படுவதாக பொய்ப் பிரசாரம் செய்கின்றனர்.
இது தொடர்பாக தமிழக அரசு உண்மை நிலையை தெரிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். அத்துமீறுபவர்களை கைது செய்ய வேண்டி நேரிடும் என்று அவர்களிடம் விளக்கினோம்.
தமிழகத்திற்குச் சென்று அங்குள்ள அரசியல்வாதிகளுடன் கலந்துரையாடி இந்தப் பிரச்சினையைத் தீர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.