நேற்று (16) முதல் மின் துண்டிப்பு நிறுத்தப்படும். இதற்கமைவாக தொடர்ச்சியாக மின் விநியோகத்தை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்தள்ளார்.
நடைபெற்ற விஷேட ஊடகவியலாளர் சந்திப்பில் இதுதொடர்பாக அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், மக்களின் நலன் கருதி தொடர்ச்சியாக மின் விநியோகத்தை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி தெரிவித்தார்.
மின் கட்டண மறுசீரமைப்புக்கு அனுமதி வழங்கப்பட்டதுடன் நிலக்கரி கொள்வனவுக்கு இலங்கை வங்கியில் மேலதிகமாக 22 பில்லியன் ரூபா கடனை வழங்குவதற்கு உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர், நாம் ஜனவரி மாதத்தில் வழங்கிய ஆலோசனை ஜனவரி மாதத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் எமக்கு இது மேலும் இலகுவாக அமைந்திருக்கும் என்றும் அவர் கூறினார்.
இருப்பினும், தாமதமாகியேனும் இந்த அனுமதி கிடைத்தது. இதன் மூலம் இன்று தொடக்கம் தொடர்ச்சியாக மின் விநியோகத்தை உறுதி செய்ய முடியும் என நான் நம்புகின்றேன். இதேபோன்று எமக்கு இன்று தொடக்கம் நிலக்கரி எரிபொருள் முதலானவற்றை இறக்குமதி செய்வதற்கு தேவையான வசதிகள் வங்கி மூலம் கிடைக்கிறது என்று குறிப்பிட்ட அமைச்சர் தவறான கருத்தை சமூக மயப்படுத்த சிலர் முயற்சித்தனர். இந்த கட்டண அதிகரிப்பு மின்சார சபை முன்னர் அடைந்திருந்த நட்டத்தை ஈடு செய்வதற்காகவே என்று இவர்கள் குறிப்பிட்டனர். அவ்வாறு எதுவும் நடைபெறாது என்றும் தெரிவித்தார்.
மின்சார கட்டண அதிகரிப்பு எதிர்காலத்தில் இடம்பெறாது என நான் நம்புகிறேன். இந்த அறவீட்டு முறையை நடைமுறைப்படுத்துவதன் மூலம் சமகால அரசாங்கம் எதிர்வரும் காலங்களில் மின்கட்டணத்தை மேலும் குறைக்கக் கூடியதாக இருக்கும்.
ஜனாதிபதி மேலும் ஆலோசனை வழங்குகையில் தொடர்ச்சியாக மின் விநியோகத்தை வழங்குவது மாத்திரமின்றி குறைந்த வருமானத்தை கொண்ட குடும்பங்களை இலக்காக கொண்டு பொருத்தமான வேலைத்திட்டத்தை வகுக்குமாறும் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைவாக நிதியமைச்சும் எமது அமைச்சும் கூட்டாக குறைந்த வருமான கொண்டவர்கள் மற்றும் குறைவாக மின்சாரத்தை பயன்படுத்தும் மக்களுக்காக திட்டமொன்றை நடைமுறைப்படுத்த எதிர்பார்த்துள்ளோம்.
இதனை விரைவாக செய்ய முடியாது இதற்கு சில காலம் செல்லும். இதேபோன்று அரசாங்கத்தினால் நடத்தப்படும் கல்வி நிறுவனங்கள் மற்றும் அனைத்து மத வழிபாட்டு தலங்களையும் இலக்காக கொண்டு இந்தியாவினால் வழங்கப்பட்ட 100 மில்லியன் கடன் கீழ் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அதனை 3 மாத காலப் பகுதிக்குள் நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜயசேகர மேலும் தெரிவித்துள்ளார்.