மாத்தறை சிறைச்சாலையின் G மற்றும் F ஆகிய இரண்டு பகுதிகளில் மரத்தின் கிளையொன்று முறிந்து விழுந்ததில் காயமடைந்த 12 கைதிகள் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தை அடுத்து மாத்தறை சிறைச்சாலை தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாத்தறை சிறைச்சாலை அத்தியட்சகர் மங்கள வெலிவிட்ட தெரிவித்துள்ளார்.
மாத்தறை சிறைச்சாலையில் குறைந்த இடவசதி இருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அரச மரத்தின் கிளை முறிந்து விழுந்து விபத்துக்குள்ளானதால் ஜி மற்றும் எப் பகுதிகள் கடுமையாக சேதமடைந்துள்ளன.
குறித்த விபத்தில் உயிரிழந்த கைதி, போதைப்பொருள் வர்த்தக குற்றச்சாட்டின் பேரில் 20,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டு அபராதத் தொகையை செலுத்தாமையால் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவர் என தெரிவிக்கப்படுகிறது.
தற்போது சிறைச்சாலையின் பாதுகாப்பு உறுதிப்படுத்திப்படுத்தப்பட்டுள்ள நிலையில், சிறைச்சாலையில் நடவடிக்கைகள் வழமை போன்று இடம்பெற்று வருவதாகவும் மங்கள வெலிவிட்ட குறிப்பிட்டுள்ளார்.
காயமடைந்த 11 கைதிகள் தற்போது மாத்தறை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.