பதுளை மாவட்டத்தின் ஹல்துமுள்ளை கல்விப் பிரிவைச் சேர்ந்த நான்கு பாடசாலைகளில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஒரு பாடசாலை முழுமையாக மூடப்பட்டுள்ளதுடன், ஏனைய மூன்று பாடசாலைகளில் குறிப்பிட்ட வகுப்புக்களைக் கொண்ட கட்டடத் தொகுதிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இத்தகவலை ஹல்துமுள்ளை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் அசங்க சம்பத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
கொஸ்கம வித்தியாலயத்தில் அதிபர், ஆசிரியர்கள் மூவருக்குக் கொரோனாத் தொற்று உறுதியானதால், அந்த வித்தியாலயம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதுடன், சொரகுன மகா வித்தியாலயத்தில் தரம் 1, தரம் 2, தரம் 11 ஆகிய வகுப்புகளைக் கொண்ட கட்டடத் தொகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
அமிலகம மகா வித்தியாலயத்தில் தரம் 5 வகுப்புகளைக் கொண்ட கட்டடத் தொகுதியும் மூடப்பட்டள்ள அதேவேளை, இலுக்பெலெஸ்ஸ மகா வித்தியாலயத்தின் தரம் 3 வகுப்புகளைக் கொண்ட கட்டடத் தொகுதியும் மூடப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிட்ட நான்கு வித்தியாலயங்களின் வகுப்புக்கள் உள்ள கட்டடத் தொகுதிகளுக்குக் கிருமிநாசினி தெளித்து சுத்தப்படுத்துவதற்கான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதிபர், ஆசிரியர்கள் மூவர் மற்றும் நான்கு மாணவர்கள் ஆகியோருக்குக் கொரோனாத் தொற்று உறுதியாகியுள்ளமை அவர்களிடம் மேற்கொண்ட ‘ரெபிட் அன்டிஜன்’ பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.
தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதுடன், தொற்றாளர்களுடன் தொடர்பைப் பேணியவர்களை அடையாளம் கண்டு, அவர்களைத் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
லுணுகலையில் மூன்று சிறுபிள்ளைகள் உள்ளிட்ட 13 பேர் கொரோனாத் தொற்றால் பீடிக்கப்பட்டுள்ள நிலையில், 12 மாத ஆண் குழந்தை மற்றும் 3, 4 ஆகிய வயதுகளைக் கொண்டவர்களுக்கே தொற்று உறுதியாகியுள்ளது.
மேலும், லுணுகலை பொதுச் சுகாதாரப் பணியகத்தில் மேற்கொள்ளப்பட்ட ‘ரெபிட் அன்டிஜன்’ பரிசோதனையின்போதே, மூன்று சிறு பிள்ளைகள் உள்ளிட்டு 13 பேர், தொற்றுக்குள்ளாகியமை தெரியவந்துள்ளதாகவும் லுணுகலை பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் தெரிவித்தனர்.