மஹாவெல மடவளை உல்பத்த பிரதேசத்தில் மாணவன் ஒருவரை கொடூரமாக தாக்கி கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய நண்பனின் காதலி உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மாணவன் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய அனைவருக்கும் கடுமையான தண்டனை வழங்குமாறு கோரி அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டம் நேற்றையதினம் (3) மாணவன் கல்வி பயின்ற கலைமகள் தமிழ்ப் பாடசாலைக்கு முன்னாள் இடம்பெற்றுள்ளது.
மாத்தளை மடவளை உல்பத்த பிரதேசத்தில் எம்.யுகேஸ் என்ற 17 வயது பாடசாலை மாணவன் கடந்த முதலாம் திகதி தனது நண்பரின் காதலி என கூறப்படும் 16 வயது மாணவியை சந்திப்பதற்காக மேலும் இரு நண்பர்களுடன் சென்றுள்ளார்.
காதலியின் வீட்டின் அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்திய போது, காதலியின் சகோதரி மோட்டார் சைக்கிளின் சாவியை எடுத்துச் சென்றுள்ளார்.
இதன்போது ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி கர்ப்பிணியான சகோதரி தரையில் வீழ்ந்ததுடன் இதனால் கோபமடைந்த அவரது கணவன், மாணவர்கள் மூவரையும் தாக்கியதாக மஹாவெல பொலிஸார் தெரிவித்தனர்.
அப்போது, மாணவியின் தந்தை, மற்றொரு சகோதரி மற்றும் உள்ளூர்வாசிகள் இருவரும் மோதலில் ஈடுபட்டனர். தடிகளாலும் பாதுகாப்பு தலைக்கவசத்தாலும் அவர்களை தாக்கியதில் மாணவன் பலத்த காயமடைந்து தரையில் விழுந்து மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த மாணவனின் சடலத்தின் இறுதிச் சடங்குகள் இன்று (04) நடைபெறவுள்ளன.
மற்றைய இரு நண்பர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், 16 வயதுடைய மாணவி, அவரது தந்தை, இரண்டு சகோதரிகள், ஒரு சகோதரியின் கணவர், மேலும் இருவர் தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கபப்ட்டு வருகின்றது.