முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் பயன்பாட்டுக்காக வழங்கப்பட்ட 3 வாகனங்கள் ஜனாதிபதி செயலகத்தில் கையளிக்கப்பட்டுள்ளன.
அரசாங்கத் தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு சொந்தமான 16 வாகனங்களில் 8 வாகனங்கள் கடந்த 19ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் கையளிக்கப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பிரிவு, அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தற்போது 6 அரச வாகனங்களை மாத்திரமே பயன்படுத்துவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மஹிந்த ராஜபக்ஷவின் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு செயற்பாடுகளுக்காகவே குறித்த வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
அவற்றில் நோயாளர் காவு வண்டி, வேன் மற்றும் கெப் ரக வாகனம் என்பன இன்றைய தினம் ஜனாதிபதி செயலகத்திடம் கையளிக்கப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.