கம்பளை – நுவரெலியா பிரதான வீதியில் அட்டபாகை எனும் இடத்தில் 2 மாடி வர்த்தக நிலையமொன்று இடிந்து விழுந்து முற்றாக சேதமடைந்துள்ளது.
இதனையடுத்து அப்பகுதி தாழிறங்கும் அபாயம் இருப்பதால் ஒரு வழி போக்குவரத்துக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கம்பளை நகரிலிருந்து சுமார் 5 கிலோ மீற்றர் தொலைவிலேயே அட்டபாகை அமைந்துள்ளது. அங்கு சிறிய நகரமொன்று உள்ளது. பிரதான வீதிக்கு அருகாமையிலேயே குறித்த வர்த்தக நிலையம் அமைந்திருந்தது.
எனினும், நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலையில் நேற்றிரவு மேற்படி வர்த்தக நிலையம் முற்றாக சரிந்து விழுந்துள்ளது. பொருட்கள் அனைத்து மண்ணுக்குள் புதையுண்டுள்ளன.
வர்த்தக நிலையத்தில் இருந்த தாய், தந்தை மற்றும் மகன் ஆகியோர் வர்த்தக நிலையத்தை மூடிவிட்டு, உறவினர்கள் வீட்டுக்கு செல்வதற்கு வெளியே வந்த தருணத்திலேயே இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது. இதனால் மூவரும் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர்.