புலோவ்கா பல்கலைக்கழக மருத்துவமனைக்கு, வெளிநாட்டைச் சேர்ந்த 4 மாத கர்ப்பிணி பெண் ஒருவர் பரிசோனைக்காக வந்துள்ளார்.
இதன்போது, அங்கு பணியில் இருந்த பணியாளரிடம் தனக்கான பரிசோதனை தொடர்பில் கூறியிருக்கிறார்.
ஆனால், அவர் பேசிய மொழியை சரியாக புரிந்துகொள்ளாத மருத்துவமனை ஊழியர்கள், அந்த பெண்ணுக்கு கருக்கலைப்பு செய்யவேண்டும் என தவறாக நினைத்து அதற்கான வார்டுக்கு அனுப்பியுள்ளனர்.
அங்கு ஏற்கனவே வேறு பெண்ணுக்கு கருக்கலைப்புக்கான ஏற்பாடுகளை செய்து வைத்திருந்தனர்.
அந்த வார்டில் உள்ளவர்களும் சரியாக விசாரித்து உறுதி செய்யாமல் ஆரோக்கியமாக இருந்த அந்த பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து கருக்கலைப்பு செய்துள்ளனர்.
இந்த சம்பவம், கடந்த மாதம் 25-ம் திகதி செக் குடியரசில் உள்ள மருத்துவமனையில் நடந்துள்ளது.
மருத்துவமனை ஊழியர்கள், தாதியர்கள், வைத்தியர்கள், மகப்பேறு மருத்துவர் மற்றும் மயக்க மருந்து நிபுணர் என அனைவரும் அந்த பெண்ணை சரியாக அடையாளம் காணத் தவறிவிட்டனர்.
நடந்த தவறுக்கு மொழித் தடையுடன் அலட்சியமும் காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தவறான சிகிச்சைக்கு காரணமான ஊழியர்களை மருத்துவமனை நிர்வாகம் பணி இடைநீக்கம் செய்துள்ளது. நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.